’செங்களம்’ இணையத் தொடர் விமர்சனம்1

63

சென்னை:

தற்போது வெளிவரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வெற்றி பெறாதபோது அமேசான்,நெட்பிலிக்ஸ், ஆஹா, ஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற இணையத்தில் வெளியாகும் இணையதொடர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வெற்றி பெறுகின்றன. அதன் அடிபடையில் தற்போது  Zee5 OTT தளத்தில் வெளியாகியிருக்கும்  ‘செங்களம்” இணைய தொடர் ஒரு சான்று.

‘செங்களம்” இணைய தொடரின் கதையைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் முக்கிய மாவட்டமான விருதுநகர் நகராட்சியை மையமாக வைத்து கதை எழுதி, இயக்கி இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். விருதுநகர் நகராட்சியைக் கதைக்களமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருந்தாலும் தொடரைப் பார்க்கும் அனைவருக்கும் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தலைவர்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நாற்பது ஆண்டுகளாக  சரத் லோகித்சவா குடும்பத்தினர் விருதுநகர் நகராட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள். அப்போது அவரது மூத்த மகன் பவன் விருதுநகர் நகராட்சி தலைவராக இருக்கிறார். இதற்கிடையே சரத் லோகித்சவா தன் மகனான நகராட்சி தலைவர் பவனுக்கு இரண்டாம் தாரமாக வாணி போஜனை திருமணம் செய்து வைக்கிறார்.. திருமணம் ஆன சில மாதங்களில் அவர்கள் ஹனிமூனுக்கு கொடைக்கானல் செல்கின்றனர். கொடைக்கானலை நெருங்கும் சமயத்தில் விபத்தில் சிக்கி பவன் இறந்து போகிறார். பவன் இறந்த பிறகு வாணி போஜனுக்கு அரசியல் ஆசை வருகிறது. தனது அரசியல் ஆசையை கணவர் குடும்பத்தாரிடம் சொல்ல தயங்கிய அவர்,  கணவன் வகித்த பதவியை கைப்பற்ற திட்டம் போடுகிறார். அதற்கு அரசியல் தெரிந்த தன்னுடன் படித்த பள்ளி தோழி ஷாலியை அழைத்து வந்து தன் கூடவே வைத்துக் கொள்கிறார். தனது தோழியின் ஆலோசனைப்படி தேர்தலில் போட்டியிட்டு நகராட்சி தலைவராகிறார் வாணி போஜன். இது அவரது மாமனார் குடும்பத்தின் அதிகாரங்களை சீர்குலைக்கும் வகையில் அமைந்து விடுகிறது. இதனால் அவரது மாமனார் குடும்பத்தில்  ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளித்தாரா?  அதன் பிறகு விருதுநகர் மாவட்ட அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? என்பதுதான் தான் ‘செங்களம்’ இணையத் தொடரின் மீதிக்கதை.

சூர்யகலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணிபோஜன் ஒரு உண்மையான அரசியல்வாதியாகவே நடித்து அசத்தி இருக்கிறார். சரத் லோகித்சவா குடும்பத்தில் ஒரு அப்பாவியான எளிமையான மருமகளாகவும், அதே சமயத்தில் அரசியலில் புகுந்து பதவி ஆசை உள்ள பெண்ணாக அவர் மாறி, இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அரசியல்வாதியாக நடிக்கச் சொன்னால் அதை அப்படியே உள்வாங்கி அந்த கதாபாத்திரத்திரமாக மாறியிருப்பதை பாராட்டலாம்.

உடன்பிறவா தோழியாக நாச்சியார் என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும ஷாலிநிவேகாஸ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி யார் இந்த நடிகை.. என்று எல்லோரையும் கேட்க வைக்கும் அளவிற்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.அவருக்கு இந்தத் தொடர் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கு பெரிய வாய்ப்புக்கள் வரும் என்பதில் ஐயமில்லை.

பேட்டைக்காளியில் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் பேராதரவு பெற்ற கலையரசன் இதில் ராயராக அப்படியே வாழ்ந்திருக்கிறார். கலைஞர் போல் தெரியும் சரத்லோகித்சவா வீல்சேரில் அமர்ந்து நடிக்கும் காட்சிகள் சிறப்பு.  மற்றும் பவன், பிரேம்குமார், லகுபரன், விஜிசந்திரசேகர், வேலராமமூர்த்தி, பக்ஸ் , டேனியல் போப், பகவதி, அர்ஜய் உட்பட இத் தொடரில் நடித்திருக்கும் அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் விருதுநகர் மாவட்டத்தின் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் நேர்த்தியாக,,யதார்த்தமாக படமாக்கி இருப்பதை ரசிக்கலாம்.

தரண்குமாரின் பின்ணணி இசை இந்த தொடருக்கு  பெரிய பலத்தை சேர்த்திருக்கிறது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் வாழ்க்கையை முக்கிய சம்பவமாக வைத்து இத் தொடரை ஒன்பது பாகங்களாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். கலைஞர் போல் தெரியும் சரத்லோகிததாஸ், ஜெயலலிதா போல் தோன்றும் வாணிபோஜன், சசிகலா மாதிரி காட்சிப்படுத்தப்பட்ட ஷாலிநிவேகாஸ் ஆகியோரை வைத்துக் கொண்டு சமகால அரசியல் விஷயங்களை மிக தெளிவாக சொல்லி புரிய வைத்து இருக்கிறார். தமிழக அரசியலில் திராவிட கட்சிகள் ஆண்டபோது அரசியல் களம்.எப்படி இருந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு அழகாக எடுத்து சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘செங்களம்’ தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்குமென்பதில் ஐயமில்லை.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.