மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை- அரசு மானியம் பெற காலக்கெடு நீட்டிப்பு

243

தமிழகத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு, சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு முழுமையாக புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து கடந்த மார்ச் 31-ந்தேதி வரை உள்ள காலங்களில் மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை சென்று வந்தவர்கள், புனித யாத்திரைக்கான அரசு மானியம் பெற கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் தமிழகத்தில் பொது ஊரடங்கும் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதால், விண்ணப்பதாரர்கள் போதிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மேலும் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் கடந்த ஏப்ரல் 30-ந்தேதிக்கு பதிலாக வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி தேதி நீட்டிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கடந்த மார்ச் 31-ந்தேதி வரை மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை சென்று வந்தவர்கள் மானியம் பெற விரும்புவோர், அறநிலையத்துறையின் இணைய தளத்தில் (www.tnhrce.gov.in ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, கமிஷனர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034’ என்ற முகவரிக்கு வருகிற 31-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.