லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் ‘பொன்னியின் செல்வன்’ பாகம்-2 படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா!

64

சென்னை:

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மிகப்பெரிய பொருட்ச்செலவில், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ‘பொன்னியின் செல்வன் – பாகம் 2’ வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன் – பாகம் 2’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பு, ரேவதி, ஷோபனா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொணடு சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,

”சின்ன வயதில் இருந்து என்னை இந்த மேடையில் நிறுத்தி வைத்துள்ள தமிழ் மக்களுக்கு நன்றி. அதன் உணர்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று தம்பி சிம்புவிற்கு தெரியும். இது தொழில் அல்ல கடமை. சந்தோஷமாக இருக்கிறேன் அதற்கு சம்பளமும் தருகிறார்கள். சிறந்த கலைஞர்களுடன் பணியாற்றிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் போன்று சில படங்கள் கைவிட்டும் போனது. மணிரத்னத்தை பார்த்து பொறாமை கொள்ளும் நபரில் நானும் ஒருவன். முதலாமானவர் பாரதிராஜா. இப்படி பட்ட‌ படத்தை இயக்கி விட்டு அமைதியாக மணிரத்னம் அமர்ந்திருக்கிறார். இது எங்கே போகும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. துபாயில் ஏ ஆர் ரகுமான் ஆர்கஸ்ட்ராவில் பாடலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பொறாமைப்பட நேரமில்லை. வாழ்க்கை சிறியது. சினிமா வாய்ப்பு இன்னமும் சிறியது. அதில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒன்றாக இருந்து ரசிக்க வேண்டும். காதலா வீரமா என்றார்கள். காதலுடன் கலந்த வீரம் வேண்டும். காதலும் வீரமும் இன்றி தமிழ் கலாச்சாரம் கிடையாது. இது தான் நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பக்தி மார்க்கம் பிறகு வந்தது தான் ‌. உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்பதை இப்படத்தில் மீண்டும் நம்மிடம் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார்.

இதில் யாராவது சொதப்பினாலும் கனவு கலைந்துவிடும். இது சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம். இதனை தூக்கிப்பிடிக்க வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் இவர்களுக்கு வாழ்த்து சொல்கின்றேன். இன்னும் பல வெற்றி மேடைகள் மணிரத்னத்திற்கு காத்துக்கொண்டு உள்ளது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற பேராசை உள்ளது.  இதுபோன்ற வரலாற்று படம் எடுக்க முடியாது என்ற பயம் எல்லோருக்குமே உண்டு. மணிரத்னத்திற்கும் அந்த பயம் இருந்திருக்கும். ஆனால் வீரம்னா என்னனு தெரியுமா பயம் இல்லாதது போன்று நடிப்பது. நானும் மணிரத்னமும் இணையும் படம் பற்றி இப்போது பேச வேண்டாம். இது பொன்னியின் செல்வன் 2க்கான மேடை.” என்றார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில்,

“எனக்கு மணிரத்னம் 31 வருடங்களாக வேலை கொடுத்து வருகிறார். சில நேரம் அவரை பற்றி பேசும்போது எப்போது கம் பேக் தரப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். என்னை 3 வருடங்களுக்கு ஒருமுறை அப்படி கேட்பார்கள். அவர் வைத்த படியில் நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம்.” என்றார்.

அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,

“ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் 5 முறை படித்திருக்கிறேன். இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். நான் கதையை படித்தீர்களா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்றார். அப்போது, இப்படத்தை நீங்கள் எடுக்க வேண்டாம் என்றேன். அவர் எடுத்தே தீருவேன் என்றார். கதைகளை படமாக்குவது எளிது, காவியங்களை படமாக்குவது கடினம் என்று கூறினேன். யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். அரைமனதாக ஒப்புக்கொண்டேன். இயக்குநர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார் வேண்டாம் என்றேன். ஆனால், படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன்.

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர்‌. அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி. கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள். ஒரு படத்தின்‌ மூலம் ஒரு தமிழ் மன்னனை அறிமுகப்படுத்திய‌ பெருமை சுபாஷ்கரனை சேரும். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இரண்டு மடங்கு ஓடும். வாழ்த்துக்கள்.” என்றார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசுகையில்,

“9ம் வகுப்பு படிக்கும் போது பொன்னியின் செல்வன் படித்தேன். எந்த படம் வேண்டுமானலும் எடுக்கலாம்.‌ ஆனால், சரித்திர கதையை பிசகாமல் எடுக்கணும். மணிரத்னம் ஜீனியஸ். இப்படத்தை எம்ஜிஆர் எடுக்க ஆசைப்பட்டார். கமல், ஸ்ரீ தேவி, என்னை வைத்து எம்ஜிஆர் பேசினார். வந்தியத்தேவனாக கமலை வைத்து எடுக்க நினைத்தார். ஆனால், அதன் பிறகு எம்ஜிஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நான் சொதப்பிவிடுவேன் என்று கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார். நாம் நிறை கொடுத்துவைத்தவர்கள். நம்மிடம்‌ நிறைய கலைஞர்கள் உள்ளனர். காதல் இல்லாமல் நாம் கலைஞர்கள் கிடையாது. காதல் ஒன்றுதான் கலைஞனை வளர்க்கிறது. மணிரத்னம் ரொமான்டிக் என்று வெளியே சொல்வது இல்லை. கமல் சொல்லி விடுவார். இப்படத்தில் கதாநாயகிகளை லட்டு லட்டாக தேர்வு செய்துள்ளார். எல்லோரையும் காதலிக்கலாம் போல. நந்தினியை, குந்தவையை, பூங்குழலியை காதலிக்கலாம். உலகம் முழுவதும் இன்று பொன்னியின் செல்வன் பற்றி விவாதிக்கின்றனர். இந்தியாவை தமிழ்நாடு பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் மணிரத்னம். நான் கடைசிவரை கடவுளிடம் போராடி மணிரத்னம் செய்வதை பார்த்துவிட்டுதான் போவேன்.” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசுகையில்,

“ரசிகர்களை நான் பிரித்து பார்த்து பேசவில்லை. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. பொன்னியின் செல்வன் படம் பார்க்க தியேட்டருக்கு ஆக்ஷிஜன் சிலிண்டர் உடன் வந்தவர்களில் எல்லாம் நான் பார்த்தேன். ஒரு கதையை இரண்டு படமாக எடுத்து வைத்துவிட்டு முதலில் இதை பாருங்கள் பின்பு இதை காட்டுகிறேன் என்று சொன்னவர் தான் மணிரத்னம். கார்த்தி இல்லையென்றால் இந்த இரண்டு பாகத்தில் என்னால் முழுமையாக நடித்திருக்க முடியாது. தூரமாக இருந்து வாழ்த்தும் ரஜினி அவர்களுக்கு நன்றி, சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி.” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில்,

“வெறும் ஆசையோடு வந்த என்னை எந்த கேள்வியும் கேட்காமல் சேர்த்துக் கொண்டார் மணிரத்னம் சார். இதுவரை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாத ஊர்களின் தியேட்டர்களில் எல்லாம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. நான் கைதி படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது அவரிடம் இருந்து அழைப்பு வந்தது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாயா என்றார், நான் சிவாஜி கணேசன் வசனங்கள் எல்லாம் பேசி நடித்துக் காட்டினேன். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சார், கமல் சார் பேசினார்கள், அது இப்போது தான் புரிகிறது மணிரத்னம் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். பையா திரைப்படத்திற்கு எனக்கு நிறைய காதல் கடிதங்கள் வந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் எனக்கு நிறைய மெசேஜ் வருகிறது.” என்றார்.

 

 

 

 

.