சென்னை:
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், உருவான “பத்து தல” படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி டீஜே அருணாசலம், கலையரசன், சௌந்தர், , அனு சிதாரா, சந்தோஷ் பிரதாப், மனுஷ்யபுத்திரன், சென்ராயன், மது குருசாமி ஆகியோர் நடித்துள்ளனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஓபிலி கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் கதைப்படி… முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப், துணை முதல்வர் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் ஒரு புதிய மருத்துவ திட்டம் துவக்க விழாவில் கலந்து கொண்டு இருவரில் யார் பெரியவர் என்பதை ரகசியமாக பேசிக்கொண்டு, பொது மக்கள் மத்தியில் ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டி கொள்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிலம்பரசன் தாது மணல் கொள்ளை அடிப்பவராக மாஃபியா கும்பல் தலைவனாக விளங்குகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை மற்றும் அரசாங்கத்தில் உள்ளவர்களை தனது சொல்லுக்கு கட்டுப்பட்டு அடி பணிய வைத்திருக்கிறார் சிலம்பரசன். தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை சிலம்பரசன்தான் முடிவு செய்வார். அவ்வளவு பலம் வாய்ந்தவராக இருக்கும் சமயத்தில் முதலமைச்சர் திடீரென்று கடத்தப்படுகிறார்..
ஒரு வருடமாகியும் முதலமைச்சர் எங்கு இருக்கிறார் என்பது எதுவும் தெரியாத நிலையில், சிலம்பரசன்தான் இந்த கடத்தலுக்கு காரணம் என்று ஒரு புறம் சந்தேகிக்கும் காவல்துறை. அதிகாரிகள் சிலம்பரசனின் மாஃபியா கும்பல் செயல்பாடுகளை கண்டுபிடிக்க, அவரது அடியாட்களுடன் கௌதம் கார்த்திக்கையும் ஒரு அடியாளாக உள்ளே நுழைய வைக்கின்றனர். சில சமயங்களில் எதிரிகளுடன் மோதும்போது சிலம்பரசனை, கௌதம் கார்த்திக், காப்பாற்றுகிறார். அதனால் கௌதம் கார்த்திக் மீது சிலம்பரசனுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் எதற்காக கடத்தப்பட்டார்? கடத்தப்பட்ட முதலமைச்சரை கண்டுபிடித்து கௌதம் கார்த்திக் மீட்டு வந்தாரா ? இல்லையா ? என்பதுதான் “பத்து தல” படத்தின் மீதிக்கதை.
ஏ.ஜி.ராவணன் என்ற ஏ.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் தாது மணல் மாஃபியா தலைவனாக படத்தின் இரண்டாம் பாதியில் பிரவேசம் செய்யும் சிலம்பரசன் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதையும் தனது நடிப்பு மூலம் கதாபாத்திரத்தை உணர்ந்து சுமந்திருப்பதோடு, தங்கையிடம் கண் கலங்கி சொல்லும் செண்டிமெண்ட் காட்சிகளிலும் அனைவரையும் கவர்கிறார் சிலம்பரசன்னைப் பொறுத்தவரை ஆக்ஷன், சென்டிமென்ட், கருணை என பல்வேறு பரிமாணங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தனது ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். இதே ஸ்டைலில் கதையில் கவனம் செலுத்தி தனது நடிப்பாற்றலை வெளிபடுத்தினால் கண்டிப்பாக அதிரடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவார் என்பதில் ஐயமில்லை.
படத்தின் மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் கௌதம்கார்த்திக்கின் துடிப்பான நடிப்பும் அவருடைய இரகசியம் நிறைந்த கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. சண்டைக்காட்சிகளில் எதை செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும்படி இருப்பது படத்திற்கு மட்டும் இன்றி அவருடைய கதாபாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது. இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது.
தாசில்தாராக வரும் பிரியாபவானிசங்கரின் கதாபாத்திரம் சிறியதென்றாலும் தனது நடிப்பில் நிறைவாகவே செய்து இருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது.
துணை முதல்வர் கதாப்பாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மிக சிறப்பாக நடித்துள்ளார். கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறார்.இதுவரை பல படங்களில் அதிகாரதோரணையுடன் நடித்து வந்த கவுதம்மேனன், அரசியல்வாதியாகவும் நன்றாகப் பொருந்தியிருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி, டீஜே அருணாசலம், கலையரசன், சௌந்தர், , அனு சிதாரா, சந்தோஷ் பிரதாப், மனுஷ்யபுத்திரன், சென்ராயன், மது குருசாமி ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘முப்தி’ என்ற படத்தை தமிழில் ‘பத்து தல’ யாக கொண்டு வந்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா. திரைக்கதையில் இன்னும் கமர்ஷியலாக சில விஷயங்களை சேர்த்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கி ஏந்திய அத்தனை பேருடன் தனி ஆளாக ஹீரோ சண்டையிடுவது எல்லாம் எப்போது மாறும் என்று தெரியவில்லை. ஹாலிவுட் ஸ்டைலில் படத்தை இயக்கினாலும் மக்கள் நம்பக் கூடிய அளவுக்கு சண்டைக் காட்சிகளை படமாகி இருக்கலாம். இருந்தாலும் இயக்குனர் கிருஷ்ணாவின் முயற்சிக்கு பாராட்டுகள்.
ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷாவின் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. ஹெலிகாப்டரில் சிம்பு வரும் காட்சிகளில் அவரது கதாபாத்திரத்தை பெரிய அளவில் உயர்த்திக் காட்டியிருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை ஒரு கதாபாத்திரம் போல கதைக்குப்பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில், ‘பத்து தல’ படத்தை சிலம்பரசனின் ரசிகர்கள் மட்டுமல்ல…அனைவரும் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.