‘விடுதலை’ திரை விமர்சனம்!

48

சென்னை:

‘விடுதலை’ படத்தின் கதையை பொறுத்தவரையில் 19 87 ஆம் ஆண்டு காலகட்டத்தில்  தர்மபுரி மாவட்டத்தில் ஒரு மலை கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். . அருமபுரி என்ற  ஒரு மலை கிராமத்தில் உள்ள கனிம வளத்தை தோண்டி எடுத்து  சுரங்கம் அமைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. அதற்காக மலைவாழ் மக்களை விரட்டி அடித்து விட்டு அந்த மலையில் உள்ள கனிம வளங்களை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்கிறது.

இந்த நிலையில் அந்த மலைவாழ் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் போலீசார் மலைவாழ் மக்களை அடித்து துன்புறுத்துகிறார்கள்.  அந்த சூழ்நிலையில் மலைவாழ் கிராமத்தில் வாழும் மக்களை காப்பாற்றுவதற்காக தமிழர் மக்கள் படை என்ற ஒரு அமைப்பு ஆயுதமேந்தி போராட தயாராகிறது. அந்த அமைப்பு இருக்கும் வரை கனிம வளங்களை எடுக்க முடியாது என்பதால், அப்பகுதியில் நடக்கும் ரயில் குண்டு வெடிப்பு சம்பவ பழியை அந்த அமைப்பின் மீது சுமத்தி, தமிழர் மக்கள் படையை தீவிரவாத நக்சலைட் அமைப்பாக கருதி அரசாங்கம் அந்த அமைப்பில் உள்ளவர்களை சுட்டு பிடிக்க உத்தரவிடுகிறது. இதையடுத்து ‘ஆபரேஷன் கோஸ்ட்’ என்ற பெயரில் தமிழர் மக்கள் படை தலைவரான விஜய் சேதுபதியை பிடிப்பதற்காக மலை மீது காவல்துறையினர்  முகாமிடுகிறார்கள். அந்த காவல்துறை அதிகாரிகளிடம் சாதாரண ஜீப் டிரைவராக பணி புரிகிறார் சூரி.. அந்த காவல்துறை அதிகாரிகள் மத்தியில் மனித தன்மை  உள்ளவராக சூரி இருப்பதால் உயர் அதிகாரியின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாகி,  பாதிக்கப்படுகிறார்.

இந்த நிலையில், மக்கள் படைக்கும், காவல்துறை படைக்கும் இடையில் பெரிய அளவில்  மோதல் சம்பவங்கள்  நடக்கிறது. இதில் போலிஸ் தரப்பில் அதிக உயிர் சேதம் ஏற்பட்டதால் விசாரணை என்ற பெயரில் அந்த மலைவாழ் கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரையும் நிர்வாணமாக்கி சித்ரவதை செய்கிறார்கள். அங்கு சூரி காதலிக்கும் மலை வாழ் பெண்ணையும் நிர்வாணமாக்கி அடித்து உதைப்பதை பார்த்து பதறுகிறார். இதனால் தமிழர் மக்கள் படை தலைவரான விஜய் சேதுபதி எங்கு இருக்கிறார் என்பது எனக்கு தெரியும் என்று காவல்துறை  அதிகாரி கெளதம் மேனனிடம் சூரி கூற, அவரும் சூரியை நம்பி போலிஸ் படையை அனுப்புகிறார். கடைசியில்  தமிழர் மக்கள் படை தலைவரான விஜய் சேதுபதியை காவல்துறையினர் கைது செய்தார்களா? இல்லையா? என்பதுதான் விடுதலை’ படத்தின் மீதிக்கதை!

கதையின் நாயகனாக சூரி மிக சிறந்த நடிகன் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்து காட்டி உள்ளார்.  இவரது நடிப்பு வெள்ளந்தியாக இருந்தாலும், தவறு செய்யாமல் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று  காவல்துறை  அதிகாரி சேத்தன் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் காட்சிகளிலும், தன் காதலியிடம் அன்புடன் பேசும் காட்சிகளிலும் கதையின் நாயகனாக அசத்தி இருக்கிறார். கடைநிலைக் காவலர் குமரேசன் வேடத்துக்கு அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் சூரி. . சும்மா சிரிக்க வைத்துவிட்டுப் போகிற காமெடியன் நான் இல்லை, கதாநாயகனாக நன்றாக நடித்து உங்களைக் கலங்க வைத்து அனைவரின் கவனத்தையும் கவரவும் தெரியும் என்று இப்படத்தில் காட்டி விட்டார் சூரி.

கதாநாயகியாக நடித்திருக்கும் பவானிஸ்ரீ மலைவாழ் மக்கள் இன பெண் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமான நடிகையாக இருப்பதோடு தனது அளவான, எளிமையான, இனிமையான, சிறப்பான  நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கவர்கிறார்.

காவல்துறை அதிகாரிகளாக வரும் சேத்தன், கவுதம்மேனன், ராஜீவ்மேனன், தமிழ் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணந்து சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறாரகள்.

வாத்தியார் என்று படம் முழுக்க அவரைப் பற்றி வசனம் பேசினாலும் படத்தில் சிறிது  நேரமே வரும் விஜய்சேதுபதி, கடைசி கட்ட காட்சிகளில் தன் முத்திரையைப் பதித்து அசத்தி அனைவரது கைத்தட்டலையும் பாராட்டையும்  பெறுகிறார்.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் ஜெயமோகன் கூட்டணியின் வசனங்கள் சிறப்பாக இருந்தாலும், அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ ‘அசுரன்’ஆகிய படங்களை விட  ’விடுதலை’ என்ற தலைப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் என்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு  இயக்குநர் வெற்றிமாறன் கதையை கச்சிதமாக நகர்த்தி மக்கள் ரசிக்கும் விதத்தில் படத்தை இயக்கி இருக்கிறார்..பாலு மகேந்திரா பட்டறையில் இருந்து வந்த இவர் தனக்கென்று, ஒரு பாணியை உருவாக்கி, ஒரு சிறிய  சம்பவத்தை மையமாக வைத்தாலும் அதற்கேற்றவாறு திரைக்கதை அமைத்து இயக்குவதில் வல்லவர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்து காட்டி உள்ளார். தமிழகத்தில் முப்பது  ஆண்டுகளுக்கு முன்பு பலத்த அதிரவுகளை ஏற்படுத்திய அரியலூரில் ரயில் குண்டுவெடிப்பு, வாச்சாத்தி கொடுமைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தி இயக்கி இருக்கிறார்..இயக்குநர் வெற்றிமாறன்.

இளையராஜா இசையில் “காட்டு மல்லி…” பாடல் ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை கதைக்கும் காட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் விதத்தில்  அமைந்திருக்கிறது.

மலைவாழ் கிராமத்திற்குள் புகுந்து  ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இரவு காட்சிகளை மிக இயல்பாகவும், அற்புதமாகவும் படமாக்கியிருக்கிறார்..

மொத்தத்தில் ’விடுதலை’ படத்தை எல்லா தரப்பினரும் பார்க்க வெண்டிய படம் என்றே சொல்லலாம்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.

 

 

 

 

 

.