சென்னை:
பள்ளியில் படிக்கும்போதே மோட்டார் சைக்கிளை ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையுடனும், அது மட்டும் இல்லாமல் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக வரவேண்டும் என்று ஆர்வத்துடனும் வளர்ந்து வருகிறார் அகில் சந்தோஷ். பள்ளி படிப்பு முடித்ததும் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை வைத்து எப்படி ஓட்டுவது என்பதை பழகிக் கொள்கிறார். கல்லூரியில் படிக்கும் போது தன் நண்பர்களிடம் எப்படியாவது சொந்தமாக ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அகில்சந்தோஷ்.
தனது கல்லூரி படிப்பை முடித்ததும் ஒரு கார் கம்பெனியில் பணிபுரிகிறார். அப்போது அவர் நினைத்த மாதிரியே மாத தவணையில் ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி வீட்டில் நண்பனுடைய மோட்டார் சைக்கிள் என்று பொய் சொல்லி, ஏமாற்றுகிறார். இந்த சூழ்நிலையில் நண்பருடன் இணைந்து ரோட்டில் நடக்கும் ஒரு சாதாரண மோட்டார் சைக்கிள் பந்தய போட்டியில் பங்கேற்று அதில் வெற்றியும் பெறுகிறார். இந்நிலையில் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் பெரிய அளவில் நடக்கும் மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டியில் கலந்து கொள்ள அகில் சந்தோஷ் தேர்வாகிறார். அந்த மோட்டார் சைக்கிள் பந்தய போட்டியில் கலந்து கொண்ட அகில் சந்தோஷ் வெற்றி பெற்றாரா? தோல்வியை தழுவினாரா? என்பதுதான் “ரேசர்’ படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் அகில் சந்தோஷ் புதுமுக நடிகர் என்றில்லாமல் மிக இயல்பான நடிப்பினால் அனைவரையும் கவர்கிறார். முதல் படம் போல் இல்லாமல் மிக நேர்த்தியாக, சிறப்பாக நடித்திருக்கிறார். தனது தந்தையிடம் தான் ஆசைப்பட்டதை சொல்லும்போதும், தந்தை வாங்கி தருகிறேன் என்று சொல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சியான காட்சிகளிலும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படத்திற்க்குப் பிறகு அகில் சந்தோஷிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்பது நிச்சயம்.
கதாநாயகியாக நடித்திருக்கும் லாவண்யா, குறைவான காட்சிகளில் நடித்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நிறைவாகவே செய்து இருக்கிறார்..
கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூர்த்தி, தனக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்திருக்கிறார்.
மோட்டார் பைக் மெக்கானிக்காக நடித்திருக்கும் ஆறு பாலா, ரேசுக்காக ஒரு மோட்டார் பைக்கை உருவாக்கி கொடுக்கும் காட்சியில் அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில் நடித்திருப்பதை பாராட்டலாம்.
வில்லனாக நடித்திருக்கும் அரவிந்த், நாயகனின் பயிற்சியாளராக நடித்திருக்கும் அனீஷ் மற்றும் அம்மாவாக நடித்திருக்கும் பார்வதி என அனைவரும் தங்கள் பணியை மிக சிறப்பாக செய்து, குறையில்லாமல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கதைக்கு ஏற்றபடி பைக் ரேஸ்ஸிற்கு தேவையான விறுவிறுப்பை பரபரப்பான காட்சிகள் மூலம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து பாராட்டுக்களை பெறுகிறார் ஒளிப்பதிவாளர் பிரபாகர்.
இசையமைப்பாளர் பரத்தின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மோட்டார் பைக் ரேஸ் கனவுக்காக போராடும் இளைஞனைப் பற்றிய கதையை தேர்வு செய்து, அந்த கதைக்கு தகுந்தவாறு திரைக்கதை அமைத்து, அதை சரியான முறையில் படமாக்கியுள்ள இயக்குனர் சாட்ஸ் ரெக்ஸ் அவர்களை பாராட்டியே தீர வெண்டும். அவனது குடும்ப உறவுகளைப்பற்றியும், லட்சியம் இடையில் வரும் காதல், மோதல் என பல உணர்வுகளை திரைக்கதையின் மூலம் மெருகேற்றியுள்ளார்.இப்படத்தில் உண்மையான பைக் ரேஸ் வீரரை அறிமுகப்படுத்தி, நடிக்க வைத்து இருப்பது தத்ரூபமாக இருந்தது. பல காட்சிகளில் எதார்த்தமாகவே பயணித்து இருப்பதை பார்க்கும்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார். மொத்தத்தில், இதுவரையில் யாரும் சொல்லாத ஒரு பைக் ரேஸ் கதையை மக்களுக்கு சொன்ன இயக்குனர் சாட்ஸ் ரெக்ஸ் அவர்களை பாராட்டலாம்.
கண்டிப்பாக மோட்டார் பைக் ஓட்டுபவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘ரேசர்’
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.