சென்னை:
சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு கட்டிட பொறியாளராக வலம் வரும் அருள்நிதி வாய்பேசமுடியாதவராக, காது கேளாதவராக தனது தந்தை பாராதிராஜாவுடன் வாழ்ந்து வருகிறார். . இவரது தந்தை பாரதிராஜா, தனது சகோதரியின் மகளை அருள்நிதிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு கட்டிடப் பணியில் இருக்கும் போது அருள்நிதி கண்முன்னே, மேலிருந்து கான்கிரீட் தளம் கீழே விழ, அதில் சிக்கிக்கொண்டு பாரதிராஜா மயக்கம் அடைகிறார். படுகாயம் அடைந்த பாரதிராஜாவை தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ் வண்டியில் சென்ற அருள்நிதி ஒரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். இந்த சூழ்நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களால் அருள்நிதிக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் அவரது குடும்பத்திற்கும் ஆபத்து உருவாகிறது. அந்த ஆபத்திலிருந்து தனது குடும்பத்தை அருள்நிதி எப்படி காப்பாற்றுகிறார்? வில்லன்களை அடக்கி தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதுதான் “திருவின் குரல்” படத்தின் மீதி கதை.
வாயும் பேச முடியாது, காதும் கேட்க முடியாது. காது கேளாதவராகவும் ஊமையாகவும் இப்படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார் அருள்நிதி, நடிப்பு என்பது சிறந்த முறையில் வசனம் பேசி நடிக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் அதிகம் உள்ள இயக்குனர்கள் மத்தியில், ஒரு நடிகரின் உண்மையான நடிப்புத் திறமையை அறிய அவருக்கு வாய்பேச முடியாத கதாபாத்திரம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இந்தப் படத்தில் வாய்பேசமுடியாத காது கேளாத கதாபாத்திரம் அருள்நிதிக்கு கொடுத்து.அதைச் சிறப்பாகச் செய்ய வைத்து அவரது நடிப்பாற்றலை வெளியே கொண்டு வந்துள்ளார் இயக்குனர் ஹரீஷ்பிரபு. உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தையின் நிலைமையை பார்த்து பதறுவதிலும் சரி, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆபத்து வருவதை கண்டு கோபப்படுவதிலும் சரி..சண்டை மற்றும் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார் அருள்நிதி, அமைதியான, ஆவேசமான காட்சிகளில் தன் முகபாவங்களை மாற்றி, சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
அருள்நிதியின் தந்தையாக நடித்திருக்கும் பாரதிராஜா, உடல் குன்றிய நிலையில் உள்ள கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். அவருடைய அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. அவரது பணியை செவ்வனே செய்து இருக்கிறார்..
கதாநாயகியாக நடித்திருக்கும் ஆத்மிகா பாடலுக்கு மட்டும் வருகிற நாயகியாக இல்லாமல் கதையில் அவருக்கு முக்கியத்துவம் உள்ள மிக பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் அஷ்ரப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மஹேந்திரன் ஆகியோர் தங்களது கொடூரமான நடிப்பின் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் கொடூரதனமாக நடித்து இருக்கிறார்கள்..ஒல்லியான உருவம் கொண்ட கொடூரமான வில்லனாக நடித்திருக்கும் அந்த நடிகரை மறக்க முடியவில்லை.
சாம்.சிஎஸ்ஸின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருந்தாலும் கொஞ்சம் இரைச்சலை தவிர்த்து இருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் சிண்டோ படம் முழுவதும் பதற்றமான சூழல் இருக்கும்படி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிப்பதிவு செய்து இருப்பதை பாராட்டலாம்.
அரசு மருத்துவமனையில் நடைபெறும் அவலங்களை கதாநாயகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்த கதையை மிக சிறந்த முறையில் திரைக்கதை எழுதி ஹரீஷ்பிரபு இயக்கியிருக்கிறார். வழக்கமான நாயகன் என்றில்லாமல் சவாலான ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதனடிப்படையில் கதை எழுதியதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘திருவின் குரல்’ ஆக்ஷன் கலந்த குடும்பப் பாங்கான படம். கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.