“தெய்வமச்சான்” – திரைப்பட விமர்சனம்!

55

சென்னை:

நடிகர் விமல் கிராமத்து படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை  கவர்ந்த நடிகராக விளங்கியவர்.. சமீபத்தில் அவர் நடித்த “விலங்கு” வெப் சீரிஸ் அனைத்து மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.. அதனை தொடர்ந்து தற்போது வெளி வந்து இருக்கும்‘தெய்வ மச்சான்’  படத்திலும் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில்..நடித்துள்ளார். இப்படத்தை மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதையை பொறுத்தவரையில் கிராமத்தில் தன்னுடைய தந்தை பாண்டியராஜன், , தங்கை அனிதா சம்பத் என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் விமல்.  அங்கு ஒரு எலக்ட்ரிக்கல் கடையை சொந்தமாக  நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் இவருடைய தங்கை அனிதா சம்பத்திற்கு திருமணத்திற்காக  வரன் பார்க்கிறார்கள்.. ஆனால் சில காரணங்களால் வரன்கள் தடைபட்டு விடுகிறது. இதனால் மன கஷ்டத்தில் அந்த குடும்பமே  வேதனையுடன் இருக்கிறது.

அந்த கிராமத்தில் பண்ணையாராக இருக்கும் ஆடுகளம் நரேன்  தனது தம்பிக்கு  அனிதா சம்பத்தை  திருமணம் செய்து வைக்க முயற்சிக்க, அவரின் வயது அதிகமாக இருப்பதால் தட்டிக் கழித்து விடுகின்றனர்.  இந்த சூழலில் அடிக்கடி விமலின் கனவில் வரும் வேல ராமமூர்த்தி, அவருக்கு நெருக்கமானவர்களின் மரணத்தை முன் கூட்டியே சொல்கிறார். அவர் சொல்வது அனைத்தும் அப்படியே நடக்கிறது. இதற்கிடையே விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கும், வத்சன் வீரமணிக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது.

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் விமலின் கனவில் வரும் வேல ராமமூர்த்தி, ”உன் தங்கையின்  கணவன் திருமணமாகி இரண்டு நாட்களுக்குள் இறந்து விடுவான்”, என்று சொல்கிறார். இதனால் பதட்டமடைந்த விமல், தங்கையின் திருமணத்தை நிறுத்தி வத்சனின் மரணத்தை தடுக்க நினைக்கிறார்.  விமலின் தங்கையின் திருமணத்தை நிறுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றதா? அல்லது விமல் கனவில்  வந்தது போல்  மரணம் நிகழ்ந்ததா? என்பதுதான் ‘தெய்வ மச்சான்’ படத்தின் மீதிக்கதை!

கிராமத்து பின்னணியில் நடக்கும்  எந்த கதையாக இருந்தாலும் அதன் மண் மனம் மாறாமல் நடித்து கொடுக்கும்  விமல், இந்தப் படத்திலும்  வழக்கம்போல்  எதார்த்தமான  நடிப்பில் வலு சேர்த்து இருக்கிறார். அவரது கதாபாத்திரம் இப்படத்திற்கு  சரியான முறையில்  பொருந்தியுள்ளது. ’களவாணி’ ‘மஞ்சபை’ போன்ற படங்களில் மிக இயல்பாக நடித்து அசத்திய விமல், நீண்ட நாட்களுக்குப் பிறகு  ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். கதாநாயகனாக   நடித்தாலும் தன்னை சார்ந்த  நடிகர்களுக்கும் சம வாய்ப்பளித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கும் விமல், பால சரவணனுடன் இணைந்து, தனது மச்சானை பாதுகாப்பதற்காக செய்யும் பணிகள் அனைவரையும் சிரிக்க வைக்கின்றன. பால சரவணன் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது.

தங்கையாக வரும் அனிதா சம்பத்திற்கு இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் கொடுத்துள்ளனர். இதனை சரியாக செய்ய முயற்சி செய்திருக்கிறார் அனிதா சம்பத். பெரும்பாலான காட்சிகளில் சோகமாகவே நடிக்க வேண்டி இருந்தாலும் இப்படத்திற்க்குப் பிறகு பல படங்களில் நடிப்பதற்க்கு வாய்ப்புக்கள் வரும் என்பதில் ஐயமில்லை.

பாண்டியராஜன், தீபா சங்கர், ஆடுகளம் நரேன், கிச்சா ரவி உட்பட பலர் நடித்து இருந்தாலும், சிலர் சிரிக்க வைக்கிறார்கள்.

குடும்ப உறவுகளை மையமாக வைத்து  நகைச்சுவை  கலந்த படமாக ‘தெய்வ மச்சான்’ படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் மார்டின் நிர்மல் குமார். சாதாரண மையக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அதை சொன்ன விதம் சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.வழக்கமான கதையை காமெடி கலந்து கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆங்காங்கே படம் தொய்வு ஏற்படுவது போன்று இருந்தாலும் பார்வையாளர்கள் காமெடியை ரசிக்கும் படி இயக்கி இருக்கிறார்.

பின்னணி இசையமைத்திருக்கும் அஜீஸ், கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார். படத்தில் ஒரே ஒரு ,  பாடலாக இருந்தாலும் ஓரளவு பரவாயில்லை.

கிராமத்து பின்னணியை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கேமில் ஜே அலெக்ஸ்.

மொத்தத்தில்,  ‘தெய்வ மச்சான்’ படம் அனைவரும் சிரித்து மகிழ கூடிய படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

 

.