“யானை முகத்தான்” திரைப்பட விமர்சனம்!

71

சென்னை:

ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் ரமேஷ் திலக்,  ஊர்வசி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார்.  ஆனால் வாடகையை சரிவர கொடுக்காமலும் அடிக்கடி மது அருந்துவதும், மற்றவர்களிடம் பொய் பேசி ஏமாற்றுவதுமாக  அவர் தனது  வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் எந்த பிரச்சனை வந்தாலும் விநாயகர் படத்தின் முன் நின்று ‘என் கஷ்டத்தை எல்லாம் நீ தான் தீர்த்து வைக்க வேண்டும்’ என்று வேண்டி கோரிக்கை விடுகிறார்.  ஒருநாள் ரமேஷ் திலக் விநாயகரிடம் தன் குறையை சொல்லி  வேண்டும் போது அவரது கண்களுக்கு விநாயகரின் முகம் தெரியவில்லை. இதனால் அதிர்ந்து போன ரமேஷ் திலக் என்ன செய்வதென்று புரியாமல் விழிக்கிறார். அவர் எங்கு சென்றாலும் விநாயகர் புகைப்படமோ அல்லது  விநாயகர் சிலையோ ரமேஷ் திலக் கண்களுக்கு தெரியவில்லை இதனால் வேதனை அடைந்த ரமேஷ் திலக்கின் வாழ்க்கையில் என்னென்ன திருப்பங்கள் நடந்தது என்பதுதான் “யானை முகத்தான்” படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரமேஷ் திலக் படம் முழுவதும் தன் சிறந்த நடிப்பினால் அனைவரையும் கவருகிறார்.  சில இடங்களில் காமெடி மூலம் சிரிக்க வைக்கிறார். வழக்கமான பாணியில் நடித்தாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

இதனை அடுத்து நடித்திருக்கும் யோகி பாபு தும்பிக்கையில்லாத ஒரு விநாயகர் கதாபாத்திரத்தில் நடித்து காமெடி செய்தாலும் ரசிக்க முடியவில்லை.

ரமேஷ் திலக்கின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், எப்போதும் போல தனது குணச்சித்திர நடிப்பையும், அளவான காமெடியையும் கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்கிறார் ஊர்வசி தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

இப்படத்தின் கதையை காமெடியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர்  ரெஜிஷ் மிதிலா,  ‘நாம் நல்லதை செய்தால் இறைவன் நமக்கு நல்லதே செய்வார்’ என்று நகைச்சுவையாக சில முக்கியமான கருத்துகளை சொல்ல முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதை ரசிக்க முடியாமல் படம் பார்க்கும் அனைவருக்கும் சலிப்பு ஏற்படுகிறது. ரமேஷ் திலக் ஒரு முதியவரோடு ராஜஸ்தான் செல்லும் காட்சிகள் உணர்வு பூர்வமாக இருந்தாலும் எதற்காக ராஜஸ்தான் சென்றார் என்பதை இயக்குனர் சரியான முறையில் கதையை சொல்லவில்லை. இயக்குனர் அமைத்த திரைக்கதை மெதுவாக நகர்வது நம்மை சோதிக்க வைக்கிறது.

கார்த்திக் எஸ் நாயரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு பயணித்து காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. பரத் சங்கரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை பரவாயில்லை என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் “யானை முகத்தான்” படம் நமக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது..

ரேட்டிங்-2.5/5.

 

RADHAPANDIAN.