CHENNAI:
மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘தீர்க்கதரிசி’ படக்குழுவை சேர்ந்த நடிகர்கள் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன் ஆகியோர் வெளியிட நடிகை தான்யா ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ‘கள்வா’ குறும்படத்தின் இயக்குனர் ஜியா, இசையமைப்பாளர் ஜேட்ரிக்ஸ், ஒளிப்பதிவாளர் ஷரண் தேவ்கர் சங்கர், கதாநாயகி அட்சயா ஜெகதீஷ், கதாசிரியர் அப்சல், இணை இயக்குனர் ரெங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் அஜ்மல் பேசும்போது,
‘குறும்படங்கள்தான் இப்போதெல்லாம் பெரிய படங்களாக வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருகின்றன. அதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். அந்த வகையில் ‘கள்வா’ குறும்படமும் பெரிய திரைக்கு வர வேண்டும், சாதிக்க வேண்டும். இதற்காக இயக்குனர் ஜியா மற்றும் அவரது படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.
நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசும்போது,
‘கள்வா குறும்படம், ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என நம்புகிறேன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. ஜியா சார், இசையமைப்பாளர் ஜேட்ரிக்ஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்’ என்றார்.
நடிகர் ஸ்ரீமன் பேசும்போது,
‘பெரிய படம், குறும்படம், மீடியம் படம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. படம் கொஞ்சமாக நன்றாக இருந்தாலே அதை பெரிய வெற்றிப் படமாக மக்கள் கொண்டாட தவறுவதில்லை. இன்று நிறைய குறும்படங்கள்தான் பெரிய படங்களுக்கு ஏணிப்படியாக அமைகின்றன. அந்த வகையில் ‘கள்வா’ படமும் ஃபீச்சர் ஃபிலிமாக வர வேண்டும். அதற்காக ஜியாவுக்கும் ‘கள்வா’ படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மே மாதம் 5ம் தேதி வெளியாகும் எங்கள் ‘தீர்க்கதரிசி’ திரைப்படம் தனியாக வந்து ஜெயிக்கலாம் என நினைத்திருந்தோம். இந்த நிலையில் ‘கள்வா’ குறும்படமும் இந்த மாதமே ரிலீஸ் ஆவதால் ஒரு பயம் வந்திருக்கிறது. அதுதான் குறும்படத்துக்கான ஒரு பவர்’ என்றார்.
நடிகர் துஷ்யந்த் பேசும்போது, ‘
எந்த படமாக இருந்தாலும் அதற்கு மீடியாவின் ஆதரவு வேண்டும். அந்த வகையில் ‘கள்வா’ குறும்படத்துக்கும் எங்களது ‘தீர்க்கதரிசி’ படத்துக்கும் நீங்கள் (மீடியா) ஆதரவு தர வேண்டும்’ என்றார்.
நடிகர் ஜெய்வந்த் பேசும்போது,
‘கள்வா படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள். வரும் 5ம் தேதி ‘தீர்க்கதரிசி’ படம் வெளியாகிறது. எங்கள் படத்துக்கும் ‘கள்வா’வுக்கும் உங்களது ஆதரவு கண்டிப்பாக தேவை’ என்றார்.
‘கள்வா’ இயக்குனர் ஜியா பேசுகையில்,
‘இது ரொமான்டிக் திரில்லர் கதை கொண்ட படம். வழக்கமான குறும்படங்களிலிருந்து இது மாறுபட்டு, ஒரு ஃபீச்சர் ஃபிலிம் போலவே இருக்கும். இதில் கருத்து எதுவும் கூறவில்லை. முழுக்க முழுக்க என்டர்டெயினர்தான். ‘கள்வா’ என்பதற்கு திருடன் என்று அர்த்தம் என சிலர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். கள்வா என்றால் மனதை கொள்ளையடித்தவன் என்று பொருள். இது சங்க இலக்கியத்திலிருந்து எடுத்த தலைப்பு. இந்த கதைக்கு இந்த தலைப்புதான் சிறப்பாக இருக்கும் என்று எழுத்தாளர்கள் சுபாவும் தெரிவித்தார்கள். எழுத்தாளர் அப்சல் எழுதிய ‘ஹவுஸ் அரெஸ்ட்’ என்ற சிறுகதையின் ‘நாட்’எடுத்துக்கொண்டு, இதற்கு நான் திரைக்கதை எழுதியிருக்கிறேன். இதில் ஹீரோவாக ‘181’ உள்பட சில படங்களில் நடித்துள்ள விஜய் சந்துரு நடித்திருக்கிறார். மாடலும் குறும்பட நடிகையுமான அட்சயா ஜெகதீஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் காக்கா கோபால் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எனது படக்குழுவை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஷரண், இசையமைப்பாளர் ஜேட்ரிக்ஸ், எடிட்டர் பிரேம், இணை இயக்குனர் ரெங்கா, உதவி இயக்குனர்கள் செல்வா, திலீப் உள்பட அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த குறும்படத்தை ஃபீச்சர் ஃபிலிமாக எடுத்தால் கார்த்தி ஹீரோவாகவும் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாகவும் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்ராயம். காரணம், இந்த கதைக்கு அவர்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள். இந்த குறும்படத்துக்கு மீடியாவின் ஆதரவு தேவை. உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்’ என்றார்.
கள்வா டெக்னீஷியன்கள்:
கதை – அப்சல். எடிட்டிங் – பிரேம். இசை – ஜேட்ரிக்ஸ். ஒளிப்பதிவு – ஷரண் தேவ்கர் சங்கர். இணை இயக்கம் – ரெங்கா. கலை – செல்வா. திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜியா.
நடிப்பு: விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால்.