சென்னை:
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் யுவராஜ் கணேஷ், மகேஷ் ராஜ் பசலியான், நாசரேத் பசலியான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “குட் நைட்”. இப்படத்தில் மணிகண்டன் மீத்தா ரகுநாத் பிரபு திலக், ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் கவனிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார். நல்ல தரமான படங்களை வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.
இப்படத்தின் கதையை பொறுத்தவரையில் இதுவரையில் யாருமே சிந்திக்காத விதத்தில் குறட்டையை மையமாக வைத்து இயக்குனர் விநாயகர் சந்திரசேகர் படத்தை இயக்கியிருக்கிறார். மோகன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் மணிகண்டன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருடன் ஒரு அக்காவும், அக்கா கணவன் ரமேஷ் திலக், தங்கை, விதவை தாய் இவர்களுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிகிறார் அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணுடன் மணிகண்டனுக்கு காதல் ஏற்படுகிறது.
ஒரு நாள் அவரது காதலியுடன் பஸ்ஸில் பயணம் செய்யும்போது குறட்டை விட்டு தூங்கி விடுகிறார். அந்த குறட்டையின் சத்தத்தை தாங்க முடியாமல் அவரது காதலி பிரச்னை செய்து காதலே வேண்டாம் என்று இருவரும் பிரிந்து விடுகிறார்கள். குறட்டை விடுவதினால் அவதிப்படும் மணிகண்டன் யாரிடமும் பேச முடியாமல் தவிக்கிறார். இவரது ஐடி அலுவலகத்தில் மணிகண்டனுக்கு ‘மோட்டார் மோகன்’ என்ற பட்டப் பெயர் வைத்து கிண்டல் செய்கிறார்கள். அதேபோல் இவர் தனது வீட்டில் தூங்குவதற்கு செல்லும் போது அவரது குடும்பத்தினரே பயப்படுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் மீண்டும் இன்னொரு பெண் மீது மணிகண்டனுக்கு காதல் ஏற்படுகிறது. அந்தப் பெண்தான் மீத்தா ரகுநாத். வீட்டில் உள்ள பெரியோர்கள் சம்மதத்துடன்க் மீத்தா ரகுநாத்தை திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் செய்து கொண்டாலும் இரவில் தூங்கும் போது மணிகண்டனின் குறட்டை சத்தம் தாங்க முடியாமல் தவிக்கிறார். இருந்தாலும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, சகித்துக் கொண்டு மீத்தா ரகுநாத் வாழ்கிறார். ஆனால் மணிகண்டனின் குறட்டை சத்தத்தால் ஒரு கட்டத்தில் தூக்கம் கெட்டு போய் மன அழுத்ததிற்கு ஆளாகிறார். தன்னால் தன் மனைவிக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்ற நிலையில் குறட்டையை நிறுத்துவதற்கு பலவித முயற்சிகள் செய்கிறார் மணிகண்டன். ஆனால் அவர் தூக்கத்தில் விடும் குறட்டையை நிறுத்த முடியவில்லை. . இதனால் கணவன் மனைவிக்கு இடையே பல வித பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறட்டை பிரச்சனையால் மன வேதனை அடைந்த மீத்தா ரகுநாத் கணவனை விட்டு பிரியும் சூழல் ஏற்படுகிறது. கணவனை பிரிந்து வாழும் மீத்தா ரகுநாத் மீண்டும் மணிகண்டனுடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் “குட் நைட்” படத்தின் மீதி கதை!.
கதாநாயகன் மோகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டன் படம் முழுவதும் தன் நடிப்பு திறமையால் அந்த கேரக்டராகவே மாறி படத்திற்க்கு பலம் சேர்த்து இருக்கிறார். காதலிக்கும் போதும், காதலியை பிரிந்தவுடன் ஏற்படும் சோக காட்சியிலும், தனது அலுவலகத்தில் மேலதிகாரி திட்டும் போதும், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வேதனைபடுவது, மனைவிக்கு தன் குறட்டை பிரச்சினையால் பிரிவு ஏற்பட்டு ஆதங்கப்படுவது..என நடிப்பில் அசத்துகிறார். ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதை பாராட்டலாம்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நீத்தா ரகுநாத் தன் முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார். அவர் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கணவனின் குறட்டையை பொறுத்துக்கொண்டு வாழ்ந்து, அதன் வேதனையை தன் கண்களிலேயே காட்டி நடித்திருப்பது பாராட்டத்தக்கது..
ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அவரது இசையில் பாடல்கள் சுமாராகம்தான். ஆனால் பின்னணி இசை மிக சிறப்பாக அமைத்திருக்கிறார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க கூடிய அளவில் இருக்கிறது. தனது பணியை ஒளிப்பதிவில் சிறப்பாக காட்டியிருக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் விநாயகர் சந்திரசேகர் ஒரு குறட்டையை மையமாக வைத்து ஒரு சாதாரண கதையை சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்து இடைவேளை வரையில் காமெடியாக ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு கதையில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் ரசிக்கும் படியாகவே இயக்கி இருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் அனைத்து ரசிகர்களும் ரசிக்க வேண்டிய படம் :குட் நைட்”
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.