சென்னை:
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து மேற்கொள்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ்குமார் சுப்பராயன் அமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 C ஸ் என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இதனிடையே இயக்குநர் பி. ஆறுமுக குமார், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது என்பதும், ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தினை இயக்கி இவர், இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் என்பதும், இதன் காரணமாக இப்படத்திற்கு தொடக்க நிலையிலேயே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.