அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

58

சென்னை:

அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக தடம் பதிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் காவலர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர்களின் வித்தியாசமான தோற்றம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதையாகும். இதில் அந்தக் காவலர், மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆக்சன், சஸ்பென்ஸ் என சுவராசியத்திற்கு குறைவில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் என்பது இணைய தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் அனிமேஷன் எனப்படும் சித்திர படங்களைக் கொண்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதில் ஒரு முன்னணி நிறுவனம் மற்றும் படைப்புத்திறன் மிகு அரங்கத்தையும் கொண்டது. ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்திற்கு, பொழுதுபோக்கு துறையில் அனுபவசாலியான சமீர் நாயர் தலைமை ஏற்றிருக்கிறார். ‘ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்’ , ‘மித்யா’, கிரிமினல் ஜஸ்டிஸ் , ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’  போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிட்டது. ‘உண்டேகி’, ‘பௌக்கால்’ என பலரின் பாராட்டுகளையும் பெற்ற படைப்புகளையும் வழங்கி இருக்கிறார்கள். நடிகை நந்திதா தாஸ் இயக்கத்தில் கபில் சர்மா நடித்த திரைப்படமான ‘ஸ்விகாடோ’ சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது. அபர்ணா சென் இயக்கிய ‘தி ரேப்பிஸ்ட்’, சமீபத்தில் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, மதிப்புமிகு கிம் ஜிஜோக் விருதை வென்றது. தற்போது ‘சர்மாஜி கி பேட்டி’ மற்றும் ‘ ஜப் குலீ கிதாப்’ என பல படைப்புகளை திரையரங்கம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளியிட கூடிய வகையில் தயாரித்து வருகிறது. மேலும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- ‘நெட்ப்ளிக்ஸ்’, ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’, ‘அமேசான் பிரைம் வீடியோ’, ‘சோனி லைவ்’, ‘எம் எக்ஸ் பிளேயர்’, ‘ஜீ 5 ‘மற்றும் ‘வூத் செலக்ட்’ போன்ற முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களுடன் ஆக்கபூர்வமான கூட்டணியை அமைத்துள்ளது.

எப்ரியஸ் ஸ்டுடியோ எல் எல் பி

எப்ரியஸ் ஸ்டுடியோ எல் எல் பி ஒரு ஸ்டார்ட் அப் புரொடக்ஷன் ஸ்டூடியோ. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஒரு முதலீட்டு வங்கியாளருடன் கடந்த ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், நம்ப முடியாத அளவிற்கு ஆக்கபூர்வமான தொழில் முனைவோராக இதன் தலைவரான சந்தீப் மெஹ்ரா உயர்ந்திருக்கிறார். அவரது தலைமையின் கீழ் இந்நிறுவனம் சிண்டிகேஷன் மற்றும் உள்ளடக்கத் தயாரிப்புக்கான மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பல மொழிகளிலான உள்ளடக்கத்துடன் கூடிய தயாரிப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்நிறுவனம் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் போன்ற ஸ்டுடியோக்களுடன் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் பரிபூரணமான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் எல்எல்பி

தென்னிந்திய திரை உலகில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் பயணித்து வரும் முகேஷ் மேத்தா, அனில் ராதாகிருஷ்ணன் இயக்கிய ‘நார்த் 24’, ‘காதம்’ போன்ற படங்களின் உள்ளடக்க விசயங்களில் சாதனை படைத்த சி. வி. சாரதியுடன் இணைந்து செயல்படும் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றிருக்கிறது. துல்கர் சல்மான் நடிப்பில் சமீர் தய்யார் இயக்கிய ‘NAPKCB’, பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த ‘கோதா’, மலையாளத்தில் ஜெய் கிரிஷ் இயக்கத்தில் பிருதிவிராஜ் சுகுமாரன் நடித்த ‘எஸ்ரா’ மற்றும் தமிழில் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமான ‘ஆதித்யா வர்மா’ உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது.