’கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்பட விமர்சனம்!

61

சென்னை:

தற்போது வெளிவரும் படங்களில் அதிகமாக சாதியை மையமாக வைத்து பல இயக்குனர்கள்  கதையை எழுதி இயக்குகிறார்கள்.  இதற்கு உதாரணமாக பல படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். . சமீபத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் “கழுவேத்தி மூர்க்கன்”  படத்தையும்  ஜாதி அரசியலை மையமாக வைத்துதான்  எடுத்திருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மேல தெருவில் வசிக்கும் அருள்நிதியும் கீழ தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாபம் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்களாக பழகி வருகிறார்கள். .

கீழத் தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாப்புக்கு ஏதாவது நேர்ந்தால்,  உடனே அங்கு அருள்நிதி வந்து நிற்பார். .இந்நிலையில் ஜாதியை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் மத்தியில் அவர்களுக்கு எதிராக சந்தோஷ் பிரதாப்பும்,  அருள்நிதியும் இணைந்து செயல்படுகிறார்கள்.  இதனால் கோபமடையும் அரசியல்வாதி ராஜசிம்மன் எப்படியாவது அந்த கிராமத்தில் ஜாதி அரசியலை வைத்து தன் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரம் காட்டுகிறார். இந்த சூழ்நிலையில்  திடீரென்று சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்படுகிறார்.  அந்த கொலை பழி அருள்நிதி மீது விழுகிறது. . இதனால் வேதனை அடைந்த அருள்நிதி,  சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்த கயவர்களை கண்டுபிடிக்க முயல்கிறார்.  கடைசியில் சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்தாரா? அருள்நிதி மீது சுமத்தப்பட்ட கொலை பழி நீங்கியதா? என்பதுதான் “கழுவேத்தி மூர்க்கன்” படத்தின் மீதி கதை!

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி கதைகேற்றவாறு மூர்க்கனாக ஆக்சன் கதாபாத் திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சந்தன கடத்தல் வீரப்பன் மாதிரி பெரிய முறுக்கு மீசையுடன் வலம் வரும் அருள்நிதி தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்றவாறு எதார்த்தமாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். படம் முழுதும் முரட்டு ஆசாமியாக வலம் வரும் இவர் சண்டைக் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். ஆக்ரோஷத்துடன் சண்டை போடும் காட்சிகளிலும் சரி, காதலியுடன் காதல் செய்யும் காட்சிகளிலும் சரி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி  பாராட்டு பெறுகிறார்.

பூமி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அமைதியாக, மென்மையாக   நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், தனக்கு கொடுத்த பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார். நட்புக்கு இலக்கணமாக திகழும் ஒரு உன்னதமான நண்பனாக அருள்நிதியுடன் இணைந்து  நடிப்பில் சிறப்பு செய்து இருக்கிறார்.

கதாநாயகி துஷாரா விஜயனின் திமிரான  நடிப்பும், நக்கலான பேச்சும் அனைத்து காட்சிகளையும் ரசிக்க வைக்கிறது. துணிச்சலான ஒரு பெண்ணாக நடித்து இருக்கும் துஷாரா விஜயன், காதல் காட்சிகளில் மிக சிறப்பாக அனைவரையும் கவரும் விதத்தில் நடித்திருக்கிறார்.

முனீஸ்காந்த், ராஜசிம்மன், சாயாதேவி , சரத், பத்மன், யார் கண்ணன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது  படத்திற்க்கு பலம் சேர்த்து உள்ளது.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு இராமநாதபுர மாவட்டத்தின் வறட்சியையும்  கிராமத்து அழகையும் அப்படியே நேர்த்தியாக படம் பிடித்து காண்பித்து இருப்பதை பாராட்டலாம்.

டி.இமான் இசையில் பாடல்கள் சுமார்ரகம்தான்…என்றாலும், யுகபாரதியின் பாடல் வரிகள் நம்மை  கவர்கிறது. பின்னணி இசையை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைத்திருப்பதை பாராட்டலாம்..

சாதி அரசியலை மையமாக வைத்து கதை சொல்லும் போது இயக்குனர் சை. கவுதம் ராஜ். மிகுந்த கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார்.. எந்தவித சமரசமும் இல்லாமல், சாதி வெறி பிடித்த அரசியல்வாதிகளால் எப்படி ஒரு சமுதாயம் பாதிக்கப்படுகிறது என்பதை நல்ல திரைக்கதை மூலம் மிக அருமையாக சொல்லி இருக்கும் இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு சில காட்சிகளில் பழைய படங்களின் சாயல்  இருந்தாலும்,  கதையில் வரும் சில வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் “கழுவேத்தி மூர்க்கன்” ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.