பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் ‘டக்கர்’
சென்னை:
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசியதாவது,
“எல்லாருக்கும் வணக்கம்! எங்கள் அனைவருக்குமே இந்தப் படத்தோடு நீண்ட பயணம் உள்ளது. இசைக்காக எனக்கான நேரத்தை அமைத்துக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஹீரோ சித்தார்த் சார், தயாரிப்பாளர் சுதன் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் என அனைவருக்கும் நன்றி. இதுபோன்ற கதைக்கு மியூசிக்கலாக வேலை பார்ப்பது எக்சைட்மெண்ட்டாக இருக்கும். ஜூன் 9 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் பார்த்து விட்டு ஆதரவு கொடுங்கள்”.
படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் பேசியதாவது,
“’டக்கர்’ இது என்னுடைய இரண்டாவது படம். இந்தப் படத்திற்கு சித்தார்த் ஏன் என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. ஒரு கதை யோசிக்கும்போதே யாராவது மனதில் வருவார்கள். இந்தக் கதையில் லவ், ஆக்ஷன், இளம் தலைமுறையினருக்கான கண்டெண்ட் உள்ளது. இது அனைத்தும் சித்தார்த்திடம் உள்ளதால் அவரை தேர்ந்தெடுத்தேன். அவருக்கும் இந்த கண்டெண்ட் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் சுதன் என்னுடைய நண்பர். சுதன், சித்தார்த் என எங்கள் மூவருக்கும் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திவ்யன்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மிகவும் தைரியமாக இந்த தலைமுறை வெளியே சொல்லத் தயங்கும் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். யோகிபாபு அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அபிமன்யு, முனீஷ்காந்த் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு ப்ளஸ். இந்தப் படத்தில் அவரது பாடல்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொழில்நுட்பக் குழுவும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். முன்பே அறிவித்த இந்தப் படம், ஏன் இவ்வளவு தாமதமாக வெளியாகிறது என்று பலரும் கேட்டார்கள். இடையில் ஓடிடிக்கு கொடுத்து விடலாம் என்று கூட சிலர் சொன்னார்கள். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதால் திரையரங்குகளுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று இருந்தோம். ஜூன் 9 அன்று வெளியாகும் படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்”.
இதில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் பேசியதாவது,
“கோவிட் காலத்துக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். ‘டக்கர்’ பட இயக்குநர் கார்த்திக் இந்தப் படத்திற்காக என்னை சந்தித்தபோது, சில விஷயங்கள் எனக்கு ஹைலைட்டாக தோன்றியது. எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. ’டக்கர்’ என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும். வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை ‘டக்கர்’ என சொல்வார்கள். மோதல், சூப்பர் என பல அர்த்தம் உண்டு. இந்தப் படத்தில் ‘டக்கர்’ பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான க்ளாஷ்தான் அது. சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்கு பட்டது. ’குஷி’ போல காதலர்களுக்குள் வரும் பிரச்சினையா என்று கேட்டால் இல்லை. பணக்காரன் ஆக வேண்டும். ஆனால், அது முடியவில்லை எனும்போது இளைஞர்களுக்கு வரும் கோவம்தான் கதாநாயகனுக்கும். ’உங்களை இதுவரை சாஃப்ட்டாகதான் பார்த்திருப்பார்கள். இதில் ரக்கட்டாக பார்த்தால் வித்தியாசமாக இருக்கும்’ என இயக்குநர் சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை எடுத்தோம். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என என்னை நானே பாராட்டும் அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன். இந்தப் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்தான். ஜூன் 9 அன்று இந்தப் படம் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு இதன் மீது நம்பிக்கை உள்ளது. எந்த அளவுக்கு நம்பிக்கை என்றால், கார்த்தியுடன் அடுத்தடுத்து படங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். தமிழ் சினிமாவில் அவர் முக்கியமான கமர்ஷியல் இயக்குநராக இருப்பார்.
நடிகர் யோகிபாபு, கதாநாயகி திவய்ன்ஷா, சீனியர் ஹீரோ அபிமன்யு, முனீஷ்காந்த், விக்னேஷ்காந்த என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ‘உடலுறவு வேண்டுமனால் வைத்துக் கொள்ளலாம், கல்யாணம் எல்லாம் வேண்டாம்’ என கதாநாயகி டிரைய்லரில் பேசும் வசனம் அனைவரையும் மிரட்டி போட்டுவிட்டது. யூடியூப் கமெண்டிலேயே இதுதொடர்பாக நிறைய விவாதங்கள். இந்த கதாநாயகி கதாநாயகனை சந்திக்கும்போது என்ன நடந்தது என்பதும் ‘டக்கர்’ரில் இருக்கும். தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னாவுக்கு இந்தப் படம் மியூசிக்கலாக முக்கியமானதாக இருக்கும். ’டக்கர்’ திரைப்படம் திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம். நண்பர்களோடு, குடும்பத்தோடு நீங்கள் ஜாலியாக பார்க்கலாம். நிச்சயம் உங்களை ‘டக்கர்’ ஏமாற்றாது. இந்த சம்மரில் வெளியாகும் படங்களில் ‘டக்கர்’ நிச்சயம் தனி இடத்தைப் பிடிக்கும். ஆகஸ்ட் மாதம் வந்தால் ‘பாய்ஸ்’ படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நிறைய நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் நல்ல படங்களில் கமிட் ஆகியுள்ளேன். உங்கள் அனைவரது ஆதரவுடனும் ‘டக்கர்’ நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்” என்றார்.