“துரிதம்” திரைப்பட விமர்சனம்!

61

சென்னை:

நடிகர் ஜெகன் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் “துரிதம்”. இப்படத்தில் பால சரவணன்,  பூ ராமு,  ராம்ஸ் கதாநாயகியாக ஈடன் மற்றும் வைஷாலி, ஸ்ரீ நிகிலா,  ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கிறார்.  ஒளிப்பதிவு -வாசன் &அன்பு டென்னிஸ். இசை- நரேஷ். படத்தை தயாரித்து வெளியிட்டவர் திருவருள் ஜெகநாதன்.

இப்படத்தின் கதையை பொருத்தவரையில் வாடகை கார் ஓட்டுநராக சென்னையில்  பணிபுரிந்து வருகிறார் ஜெகன். அவரது வாடகை காரில் ஐடி கம்பெனியில் பணி புரியும் கதாநாயகி ஈடன் தினமும் அலுவலகத்திற்கு செல்கிறார். அப்போது கதாநாயகி ஈடனை கதாநாயகன் ஜெகன் ஒரு தலையாக காதலிக்கிறார். எப்படியாவது ஈடனிடம் தனது காதலை சொல்லி விட வேண்டும் என்று ஜெகன் முயற்சிக்கிறார். ஆனால் இவரது முயற்சி தோல்வியில் முடிகிறது. ஆனால் ஈடன் அவரை கார் ஓட்டுனராகவே பார்க்கிறார்.

இந்த சூழ்நிலையில் தனது கண்டிப்பான தந்தையின் அழைப்பின் பேரில் மதுரைக்கு செல்ல ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்கிறார் ஈடன். . ஆனால் அந்த ரயிலை தவற விட்டுவிட்ட ஈடன், எப்படியாவது மதுரைக்கு செல்ல வேண்டும் என்று தன் தோழிகளிடம் கெஞ்சுகிறார். அப்போது வாடகை கார் ஓட்டுநர் ஜெகனை அழைக்கிறார்கள். ஆனால் ஜெகன் என்னிடம் கார் இல்லை நான் மோட்டார் சைக்கிள் தான் சென்று கொண்டிருக்கிறேன். ஆகவே மதுரைக்கு செல்ல வேண்டும் என்றால் என்னுடன் மோட்டார் சைக்கிளில் ஈடன் பயணம் செய்வாரா? என்று கேட்கிறார். கதாநாயகி ஈடனும் ஜெகனுடன் மோட்டார் சைக்கிளில்  பயணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது திடீரென்று பயணிக்க முடியாமல் மோட்டார் சைக்கிள்  ரிப்பேர்  ஆகி விடுகிறது. அப்போது கதாநாயகன் ஜெகனும்,  ஈடனும் ஒரு காரில் லிப்ட் கேட்டு ஏற முயல்கின்றனர்.  காரில் ஏறிய ஈடன் கடத்தப்படுகிறார். கடத்தப்பட்ட ஈடனை ஜெகன் கண்டுபிடித்து காப்பற்றினாரா?  இல்லையா?  என்பதுதான் “துரிதம்” படத்தின் மீதிக் கதை.

சண்டியர்’ படத்தின்  மூலம்  ஆக்‌ஷன் கதாநாயகனாக வலம் வந்த ஜெகன், இந்த படத்தில்  இளமை ததும்பும் கதாபாத்திரத்தில் மிக இயல்பாகவே நடித்திருக்கிறார்.  கதை  முழுக்க சாலையில் பயணிக்கின்ற விதத்தில் அமைத்து இருந்தாலும் மோட்டார் சைக்கிள்  ஓட்டுவதில் கூட தனது நடிப்புத்திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி கதைக்கு வலு  சேர்த்திருக்கிறார் ஜெகன். கதாநாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும் காட்சியிலும், கடைசியில்  அவரிடம் இருந்து விலகும் காட்சியிலும், மிக அழுத்தமான ,நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதை பாராட்டலாம். காதல் தோல்வியில் மனம் வேதனையடைவது, கதாநாயகியை கடத்தியபோது பதறுவது என எதார்த்தமாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஈடன், கதையின் தன்மையை உணர்ந்து தனது கதாபாத்திரத்தில் ஒன்றி பயணிக்கிறார். தனது தந்தையின் கண்டிப்புக்கு பயப்படும் காட்சிகளிலும், தன் தோழிகளிடம் கெஞ்சும் காட்சிகளிலும் நடிப்பில் பளிச்சிடுகிறார்

இப்படத்தில்  கதாநாயகனின் நண்பனாக நடித்திருக்கும் பால சரவணன்,  பூ ராமு,  ராம்ஸ், ஏ.வெங்கடேஷ்  மற்றும் வைஷாலி, ஸ்ரீ நிகிலா,  ஐஸ்வர்யா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து நடித்திருக்கின்றனர்.

வாசன் மற்றும் அன்பு டென்னிஸ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். திரைக்கதையில் பயணத்துக்கு முக்கியப்பங்கு என்பதால் அனைத்து காட்சிகளையும் மிக கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்..

இப்படத்தை இயக்கியிருக்கும் சீனிவாசன், எதார்த்தமாக  கதையை எழுதி, திரைக்கதையின் மூலம் விறுவிறுப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.  படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாக கதைக்குள் நம்மை இழுத்து செல்கிறார். . ரெயிலில் வருவதாக பொய் சொல்லி விட்டு  மோட்டார் சைக்கிளில்  பயணிக்கும் ஈடன், தந்தை வெங்கடேஷிடம் சிக்கி விடுவாரோ என்ற படப்படப்பை ஏற்படுத்தும் காட்சிகள்தான் படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது.. இறுதிக் கட்ட காட்சிகளை சிறப்பாக படமாக்கி இருப்பதை பாராட்டாலாம்.

.மொத்தத்தில், “துரிதம்”  படம் நல்ல கதையம்சம் கொண்ட வேகம் நிறைந்த படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.