“காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட விமர்சனம்!

58

சென்னை:

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், உருவான படம்தான் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”   இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும், சித்தி இதானி கதாநாயகியாகவும்  நடித்து இருக்கின்றனர். மற்றும் பிரபு,  ஆடுகளம் நரேன், தமிழ், பாக்கியராஜ், சிங்கம் புலி, தீபா, விஜி சந்திரசேகர், ரேணுகா ஆகியோர் நடித்திருக்கிறனர்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில், “தனது உறவினர்கள் மத்தியில் தாய் தந்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தி இதானி, தன் அண்ணனின் மூன்று மகள்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை வளர்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சித்தி இதானியின் சொத்தை அபகரிப்பதற்காக அவரது உறவினர்கள் முயல்கின்றனர். அவரிடமிருக்கும்  சொத்துக்கு ஆசைப்பட்டு முறைமாமன்கள் சித்துஇதானியை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கின்றனர். அவரை யார் திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டு முன் வந்தாலும் வருகின்றவர்களை உறவினர்கள் அடித்து விரட்டி விடுகின்றனர்.

இந்த நிலையில் ஜெயிலில் இருக்கும் ஆர்யாவை சந்திக்க முயற்சி செய்கிறார் சித்துஇதானி. ஆனால் ஆர்யாவை சந்திக்க முடியாமல் தன் கிராமத்திற்கு வந்து விடுகிறார் சித்துஇதானி.  தன்னை சந்திக்க வந்த பெண் யார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆர்யா அந்த பெண்ணை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கு சித்துஇதானியின் உறவினர்கள் ஆர்யாவை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அதே சமயத்தில் வேறு ஒரு கும்பலும் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. தன்னை தாக்க வந்த அவர்களை  அடித்து  துவம்சம் செய்து தாக்கிய  ஆர்யா, அனைவரையும் ஓட  விடுகிறார். .அதனால் கதாநாயகி சித்து இதானிக்கு ஆபத்து என்பதை உணர்ந்த ஆர்யா, அவருக்கு பாதுகாப்பாக அந்த கிராமத்திலேயே தங்கி விடுகிறார். ஆர்யாவுக்கும், சித்து இதானிக்கும் உள்ள உறவு  என்ன?  ஆர்யாவை தாக்க வந்த இரண்டு தரப்பு எதிரிகள் யார்? என்பது தான் ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக கிராமத்து பின்னணியில் நடித்துள்ள ஆர்யா,,,வழக்கமான பாணியில் படம் முழுவதும் அதிரடி, ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துகிறார். படம் முழுவதுமே  சண்டைக்காட்சிகள் நிறைந்திருப்பதால் ஆர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு சரியாக அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். . இருந்தாலும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் முடிந்தவரை அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்..ஆக்‌ஷன் காட்சிகளில் ஆர்யாவின் உழைப்பு தெரிந்தாலும் வில்லன்களுடன் மோதும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சித்து இதானி ஆரம்பத்தில் தன் முக அழகாலும், சிறந்த நடிப்பாலும்  வலுவான கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனாலும், ஆர்யா தன்னுடன் இணைந்த பிறகு அவரது நடிப்பை வெளிக் காட்ட முடியாமல்  தவிக்கிறார். ஆனாலும் சித்து இதானி கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில்  முக்கியமான முஸ்லிம்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு, ஜமாத் குறித்து பேசும்போது அவரின் முதிர்ச்சியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.  ஆடுகளம் நரேன் மற்றும் தமிழ் ,பாக்கியராஜ், சிங்கம் புலி, தீபா, விஜி சந்திரசேகர், ரேணுகா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான்.  பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பாக அமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தன் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார். ஒளிப்பதிவு செய்த காட்சிகளில் அனல்  பறக்கிறது.

இயக்குனர் முத்தையா படங்கள் என்றாலே உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி நல்ல கதை அம்சத்தோடு எடுத்து இருப்பார்.  ஆனால் இந்த முறை மதத்துக்கும் மனித நேயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார். ஏற்கனவே இதுபோல் பல கதைகள் வந்தாலும், வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு அதோடு இந்தப் படத்தில் உறவுகளுக்கும் முக்கியத்துவம்  கொடுத்திருந்தாலும் இயக்குநர் முத்தையா, திரைக்கதை என்ற பெயரில் படம் முழுவதும் சண்டைக் காட்சிகளாக வைத்து நம்மை முகம் சுளிக்க வைத்து இருக்கிறார்..ஜாதி, மதம் இதை தவிர்த்து வேரொரு ஜானரில்  படத்தை இயக்கி இருந்தால் கண்டிப்பாக தமிழ் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ – பழைய சட்டியில் வடித்த சோறுதான்.

ரேட்டிங் ; 2.5/5

RADHAPANDIAN.