‘போர் தொழில்’ திரைப்பட விமர்சனம்!

51

சென்னை:

E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாரித்து  இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதையாகும். இதில் அந்தக் காவலர், மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆக்சன், சஸ்பென்ஸ் என சுவராசியத்திற்கு குறைவில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்று, மக்கள் மத்தியில் தனி முத்திரையைப் பதித்து ஓடி கொண்டிருக்கிறது.

‘போர் தொழில்’ படத்தின் கதையைப் பொறுத்தவரையில், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன் தனக்கு   காவல்துறையில் பணிபுரிவதற்கு விருப்பம் இல்லை என்றாலும்,  தன் குடும்பத்திற்காக காவல்துறையில் இணைந்து காவல்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார். காவல்துறையில்  பணி புரிந்தாலும் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட வராக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு இளம்பெண்கள் கை கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளை யார் செய்தது என்பதை உள்ளூர் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முயலும் போது, இந்த வழக்கு சென்னையில் உள்ள சிபிசிஐடி  காவல்துறை அதிகாரிகள் வசம் செல்கிறது.

இந்த கொலைகளை கண்டுபிடிக்க சரத்குமார் தலைமையில் காவல்துறை குழு விசாரிக்க செல்கிறது. அந்தக் குழுவில் அசோக் செல்வமும் சரத்குமாருடன் இணைந்து பணியாற்ற செல்கிறார். இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் போது,  மீண்டும் மீண்டும் கொலைகள் நடக்கிறது. இதனால் திணறிக் கொண்டிருந்த சரத்குமாரும் அசோக் செல்வனும் இணைந்து பெண்களை கொலை செய்யும் அந்த கொடூரமான கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடித்தார்களா?  இல்லையா? என்பதுதான் “போர்த் தொழில்” படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன் ஒரு வித்தியாசமான மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தாடி மீசை இல்லாத காவல்துறை அதிகாரியாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பயந்த சுபாவம் உள்ள ஒரு வெகுளித்தனமான தன் முகம் பாவங்களை மாற்றி தனது நடிப்பு திறனை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய  மேலதிகாரி சரத்குமாரிடம் பேசும்,  சில காட்சிகளில் தானும் படிப்பறிவு உள்ளவன் என்பதை காட்டும் போது நடிப்பில் சிறப்பு செய்திருக்கிறார்.

சரத்குமார் பல படங்களில் காவல்துறை சம்பந்தப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், இப்படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக தனது அனுபவ நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து அசத்தி இருக்கிறார்.  இப்படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வலம்வரும் அவர் தனது நடிப்பு அனுபவம் என்ன என்பதை காட்டியுள்ளார். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிகர்களிடம் பேசப்படும் அளவிற்கு சிறப்பாக  அப்படியே அள்ளித்தெளித்துள்ளார்.

கதாநாயகி நிகிலா விமல்.காவல்துறையிலேயே  இருந்தாலும் நடிப்பில் நல்ல பெயர் எடுத்து, தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, தேனப்பன், ஓஏகே.சுந்தர்,சந்தோஷ் கீழட்டூர், சுனில்சுகடா, ஹரீஷ்குமார் ஆகியோர் படத்தில் தங்களுக்கு கொடுத்த  கதாபாத்திரத்திற்கு எற்ப, அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். மறைந்த சரத்பாபு இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகளிலும், மற்ற காட்சிகளிலும் மெருகேற்றி
மிகச் சிறப்பான தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.எப்போதும் படபடப்புடன் ரசிகர்களை கவனிக்க  வைத்திருக்கிறது.

கிரைம் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தாலும், சமீபத்தில் வெளியான பல தமிழ் திரில்லர் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில்,  இப்படத்தின் கடைசி நிமிடம் வரை நம்மை திகிலடைய செய்து சீட் நுனியில் அமர வைக்கும் க்ரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இயக்குனர் விக்னேஷ் ராஜாவை பாராட்டியே தீர வேண்டும். வழக்கமான க்ரைம் த்ரில்லர் கதைபோல் இல்லாமல்,  காட்சிக்கு காட்சிஅனைவரையும்  ரசிக்க வைத்துள்ளார்.  இடைவேளைக்குப் பிறகு இப்படம் மெதுவாக நகர்ந்தாலும் கடைசிவரை விறுவிறுப்புடன் காட்சிகளைக் கொண்டு சென்றிருக்கிறார்  இயக்குனர்.

மொத்தத்தில் விறுவிறுப்பு நிறைந்த படம் “போர் தொழில்”.

ரேட்டிங்: 4/5.

RADHAPANDIAN.