“விமானம்” திரைப்பட விமர்சனம்!

52

சென்னை:

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் அதிகமாக வாழும் குடிசை பகுதியில் தாய் இல்லாத தன் மகனுடன் இரண்டு கால்கள் இல்லாமல் ஊனமுற்றவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. அங்குள்ள மாநகராட்சி கழிவறையை நிர்வகித்து வரும் சூழ்நிலையில் ,மாற்றுத்திறனாளியான சமுத்திரகனியின் மகனுக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. எப்படியாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் தன் மகனுக்கு ரத்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. சில காலம் தான் அவரது மகன் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் வேதனை அடைந்த சமுத்திரகனி விமானத்தில் தன் மகனை அழைத்துச் செல்ல பல விதத்தில் முயல்கிறார். ஆனால் முடியவில்லை. தன் மகனுக்காக சிறு சிறு பணிகள் செய்து பணத்தை சேர்த்தாலும், அவரது வாழ்க்கையில் பல பிரச்சினைகள் குறுக்கிட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் சமுத்திரகனி தன் மகனை விமானத்தில் பயணம் செய்யும் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதுதான் “விமானம்”படத்தின் மீதி கதை.

சமுத்திரக்கனி மாற்றுத் திறனாளி ஏழை தந்தையாக வழக்கம் போல் தனது பாணியில் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். சோகம் நிறைந்த முகத்துடன் மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் துடிக்கும் காட்சிகளில் சமுத்திரகனி அற்புதமாக நடித்து கண்கலங்க வைக்கிறார். வறுமையான வாழ்க்கையோடு போராடும் வீரய்யா என்ற கதாபாத்திரத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சிறுவனாக நடித்திருக்கும்  துருவனும் சமுத்திரக்கனிக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். அவரின் குழந்தைன்மை நம்மைக் கலங்க வைக்கிறது.  விமானத்தில் செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் போது அறியாத சிறுவயதில் அனைத்து குழாந்தைகளுக்கும் வரும் ஆசை என்றாலும் இடைவேளைக்குப் பிறகு  அவர் விமானத்தில் எப்படியாவது பறக்க வேண்டும் என்று படம் பார்ப்பவர்களை நெகிழ வைத்து இருக்கிறார்..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருக்கும்  மீரா ஜாஸ்மின் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார், அனசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன்  ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்திருக்கிறனர்.

விவேக் கலேப்புவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப நம் கண் முன்னால் விமானங்கள் பறக்கின்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். சரண் அர்ஜுனின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு மகனுக்கும் தந்தைக்கும் உள்ள பாசப் போராட்டத்தை மையப்படுத்தி அவர்களது உணர்வுகளை அழகாக பதிவு செய்ய முயற்சி செய்து இருக்கும் இயக்குனர் சிவா பிரசாத் யென்னாலா, ஒரு ஏழை  தந்தையின் கஷ்டங்களை புரிந்துக் கொண்டு, அளவுக்கதிகமான சோகங்களைக் கொண்டிருந்தாலும் உணர்வுபூர்வமான காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தி ரசிகர்கள் ரசிக்கும்படி இப் படத்தை இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் அனைத்து ரசிகர்களும் பார்க்க வேண்டிய படம்  “விமானம்”

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.