‘பானி பூரி’ தமிழ் இணையத்தொடர் விமர்சனம்!

43

சென்னை:

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ என்ற புதிய தமிழ் இணைய தொடர் OTT யில்  வெளியாகி இருக்கிறது.  மொத்தம் எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் லிவ்விங் டுகெதர் மற்றும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘பானிபூரி’ கதையைப் பொறுத்தவரையில்,

கதாநாயகன் லிங்காவும், கதாநாயகி சாம்பிகாவும் ஒருவரை ஒருவர் மனதார காதலிக்கிறார்கள். காதலர்களான  இருவரும் திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று லிங்கா ஆசைப்படுகிறார். இந்த சூழ்நிலையில், தோழியின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், காதலிக்கும் ஒவ்வொரு ஆண்களின் அன்பும் உண்மையானது இல்லை.  போலியான அன்பு.  திருமணம் ஆனதும் மாறிவிடும், என்று நினைத்து குழப்பமடையும் சாம்பிகா, லிங்காவுடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார்.

சாம்பிகாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் கேட்டு அவரது வீட்டுக்கு லிங்கா செல்கிறார். இவர்களது மன முறிவு, விஷயம் சாம்பிகாவின் தந்தை இளங்கோ குமரவேலுக்கு தெரிந்து விடுகிறது. உடனே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இளங்கோ குமரவேல், காதலர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறார். அதாவது, திருமணம் செய்துகொள்ளாமல், கணவன் – மனைவி போல் வாழும், லிவிங் டூ கெதர் முறையில் இருவரும் எழு நாட்கள் வாழ வேண்டும், இந்த ஏழு நாட்களில் லிங்காவின் காதல் உண்மையாக இருந்தால் அவரை திருமணம் செய்துக்கொள்ளலாம், இல்லை என்றால் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அதன்படி லிங்காவுடன் சேர்ந்து லிவிங் டூ கெதர் முறையில் வாழ சம்மதிக்கும் சாம்பிகா, ஒரு  அபார்ட்மெண்ட்டில் லிங்காவுடன் சேர்ந்து ஏழு நாட்கள் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்கிறார். ஏழு நாட்களுக்குப் பிறகு லிங்காவை புரிந்துக் கொண்டு சாம்பிகா வாழ்ந்தாரா? அல்லது அவரை விட்டு பிரிந்தாரா? என்பதுதான் ‘பானி பூரி’ இணைய தொடரின் கதை.

பல இணையத் தொடர்களில் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்த லிங்கா,  மிக இயல்பாகவும், அப்பாவியாகயாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். காதலில் ஈடுபடுப்போது   யாருக்கும் கவலைப்படாத ஓரு ஜாலியான இளம் வாலிபராக நடித்திருப்பவர், தனது காதலி எதிர்ப்பார்க்கும் சிறிய விஷயத்தில் வழக்கமான ஆண்களின் மனநிலையோடு யோசிக்கும் காட்சியில் அசத்தலாக நடித்து அனைவரது பாராட்டையும் பெறுகிறார்.

ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சாம்பிகாவின் நடிப்பு பரவாயில்லை. அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கலாம்.

இன்றைய இளம் ரசிகர்களுகேற்றவாறு  வெளிபடைவான தந்தையாக இளங்கோ குமரவேல் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.,நண்பனாக வரும் வினோத் சாகர் , கனிகா , கோபால் , ஸ்ரீ கிருஷ்ணா தயாள் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவும் இந்த இணைய தொடரின் கதாபாத்திரங்களின் உணர்வுகளை சிறந்த முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் பாராட்டு பெறுகிறார்.

இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை இத்தொடருக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. மாறுபட்ட முறையில் இசையமைக்க முயற்சி செய்திருக்கும், அவருக்கு பாராட்டுக்கள்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் உள்ள  லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையை ஒரு புதிய முயற்சியாக பெற்றோர்களின் ஒப்புதலுடன் லிவிங் டூ கெதர் என்ற பார்வையில் நகைச்சுவையாகவும், யோசிக்கும்படியும்  இயக்குனர் பாலாஜி வேணுகோபால் சொல்லியிருந்தாலும், காதலர்கள் இருவரும் வாழ்வதாக கதை அமைத்தபோது, சில பாகங்களில் திரைக்கதையின் வேகம் குறைந்து பலவீனமாக பயணிக்கிறது. இருந்தாலும் இந்த தொடரில் எந்த வித ஆபாச காட்சிகளை புகுத்தாமல், எல்லா காதலர்களுக்கும் வாழ்க்கையில் புரிதல் அவசியம் என்கிற உன்னதமான கருத்தினை வலியுறுத்தி  அனைவரும் ரசிக்கும் தொடராக எட்டு பாகங்களாக இத் தொடரை இயக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். அவருக்கு பாராட்டுக்கள்.

கண்டிப்பாக இளம் காதலர்கள் பார்க்க வேண்டிய ஒரு உன்னதமான இணைய தொடர் ‘பானி பூரி’

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.