“தண்டட்டி” – திரைப்பட விமர்சனம்1

55

சென்னை:

அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தண்டட்டி’.  கிராமத்தில் உள்ள  யதார்த்தமான மனிதர்களைப்பற்றியும், அவர்கள் வாழ்வியலைப்பற்றியும் தத்ரூபமாக காட்சிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சில படங்கள்தான் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் ஒரு ஆழமான அழுத்தமான காதலை அற்புதமான திரை கதையுடன் நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம் தான் ‘தண்டட்டி’

“தண்டட்டி” என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலன். தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். இந்த “தண்டட்டி”யை மையக் கருத்தாக வைத்து எடுத்து இருக்கும், இந்தப் படத்தில் பசுபதி ரோகினி விவேக் பிரசன்னா அம்மு அபிராமி தீபா மற்றும் பலர் நடிப்பில் கே எஸ் சுந்தரமூர்த்தி இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால்,

மதுரைக்கு அடுத்த தேனி மாவட்டம், ‘கிடாரிப்பட்டி’ கிராமத்தை சேர்ந்த ஒரு  மூதாட்டியான ரோகிணி காணாமல் போகிறார். அவரது பேரனான  கிஷோர் தனது அப்பத்தாவை கண்டுபிடித்து கொடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயலும்போது, ரோகிணியின் மகள்களும் புகார் கொடுக்க வருகிறார்கள். ஆனால் அங்குள்ள காவலர்கள் ‘கிடாரிப்பட்டி’  கிராமத்தில் நடந்த சம்பவம் என்பதால் கிஷோர் மற்றும் மகள்கள் கொடுத்த புகாரை வாங்க மறுக்கிறனர். அந்த சமயத்தில் காவலர் பசுபதி அங்கு வர, ரோகிணியை தேடி கிஷோருடன் செல்கிறார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்து போன நிலையில் கடைசியாக பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோகிணியை கண்டுபிடிக்கிறார்.காவலர் பசுபதி.  ஆனால், உடல் நலப்பிரச்சினையால் சில மணி நேரத்தில் ரோகிணி இறந்து விட, அவரது உடலை கிடாரிப்பட்டிக்கு காவலர் பசுபதி எடுத்துச் செல்கிறார். இறந்த போன தாயின் காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற அவரது பேராசை பிடித்த பிள்ளைகள் திட்டம் போட, திடீரென்று காதில் இருந்த தண்டட்டி காணாமல் போய்விடுகிறது.

காணாமல் போன தண்டட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில், அங்குள்ள ஒவ்வொருவரையும் விசாரிக்கிறார் காவலர் பசுபதி.  அதனால் பசுபதிக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து, அந்த தண்டட்டியை காவலர் பசுபதி கண்டுபிடித்தாரா? அதை திருடியது யார்? ரோகிணி அந்த வீட்டை விட்டு வெளியேறியது ஏன்? என்பதை காமெடியுடனும், ஒரு உன்னத காதலோடும் சொல்லி இருப்பதுதான் ‘தண்டட்டி’ படத்தின் மீதிக்கதை.

 

தங்கப்பொண்ணு என்ற கதாபாத்திரத்தில் மூதாட்டியாக நடித்திருக்கும் ரோகிணி, தனது சிறப்பான  நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து இந்த படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறார் என்றால் மிகையாகாது. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் இவர் பிணமாகத்தான் நடிக்கிறார். அற்புதமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருந்தாலும்,  ஒரு வயதான கதாபாத்திரத்தில் இப்படி ஒரு நடிப்பை வேறு யாராலும் கொடுத்து இருக்க  முடியாது. உயிரிழந்த உடலாக இருக்கும் போது தனது பணியை  சரியாக செய்து. தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்பது நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மிக அற்புதமாக நடித்திருக்கும் ரோகிணிக்கு பாராட்டுக்கள்.

 

காவலராக பசுபதி ஒரு ஆழமான அழுத்தமான கதாபாத்திரத்திற்கு இவரை தவிர வேற யாரும் பொருந்த மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு படத்தில் வரும் மொத்த காட்சிகளையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். ரோகிணியின் இறுதி சடங்கு வரை உடனிருக்க வேண்டிய சூழலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகளில் தன் அனுபவ நடிப்பை  வெளிப்படுத்தியிருக்கிறார். கிராம மக்களிடம் மாட்டிக் கொண்டு அலைக்கழிக்கப்படும் காட்சிகளில் அமைதியாக நடித்து அனைவரையும்  சிரிக்க வைக்கிறார். கோபப்பட்டு சண்டை போடும் காட்சிகளிலும் மிக அற்புதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். பசுபதியின் சிறந்த நடிப்புக்கு பெரிய பாராட்டு கொடுத்தே தீர வேண்டும்.

அம்மு அபிராமி ஓரிரு காட்சிகள் வந்தாலும் அவரது காதல் கதை ரசிகர்கள் மனதை பாதிக்கும்படி இருக்கிறது. சிறு வயதாக அம்மு அபிராமி கச்சிதமான தன் நடிப்பை கொடுத்து நம் மனதை வேதனைபட  வைக்கிறார்.

ரோகிணியின் மகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா படம் முழுவதும் பெரிய  குடிகாரனாக வருகிறார்.  உண்மையிலேயே மது குடித்து விட்டு,  குடிகாரன் போலவே தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் அவரையும்  பாராட்டாமல் இருக்க முடியாது.

ரோகிணியின் மகள்களாக நடித்திருக்கும் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோருக்கு வழக்கமான கிராமத்து கதாபாத்திரம் தான் என்றாலும், தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தன் என்றாலும் பிண்ணனி இசை மிக சிறப்பு.  அந்த கிராமத்து அழகையும், இயற்கை எழிலையும் தன் ஒளிப்பதிவு மூலம் மிகவும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.

மறந்து, மறைந்து கொண்டிருக்கும்‘தண்டட்டி’ என்ற ஒரு அணிகலனை மையமாக வைத்து கதை,எழுதி இயக்கியிருக்கும் ராம் சங்கையா, ஒரு கிராமத்தில் உள்ள மக்களின்  வாழ்வியலை யதார்த்தமாக, இப்போதுள்ள இளய சமுதாயம் ரசிக்கும்படி  இயக்கி இருக்கிறார்.  கிராமத்தில் நடக்கும் இறப்பு நிகழ்வின் சடங்குகள் எப்படி இருக்கும் என்பனவற்றை முன்னிறுத்தி ஓர் ஆழமான காதல்கதையைச் சொல்லி அனைவரின் வரவேற்பை பெற்று மனதில் நிற்கிறார் இயக்குனர்..

மொத்தத்தில் ‘தண்டட்டி’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்த்து ரசிக்கலாம்.

ரேட்டிங் 4/5.

RADHAOANDIAN.