“பாயும் ஒளி நீ எனக்கு” – திரை விமர்சனம்!

55

சென்னை:

நடிகர் விக்ரம் பிரபு,  வாணி போஜன், டாலி தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேலா ராமமூர்த்தி, ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில், கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’

இப்படத்தின் கதையைப் பொறுத்த்வரையில்,

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு வெளிச்சம் இல்லாத இடத்தில் அவரது கண் பார்வை மங்கலாக தெரியும்.  அதே சமயத்தில் வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் கண்பார்வை நன்றாக தெரியும்.. இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்தாலும் அவரது சித்தப்பா ஆனந்த்,  விக்ரம் பிரபுவுக்கு தைரியம் சொல்லி தன்னம்பிக்கையுடன் இருக்குமாறு அறிவுரை செய்கிறார். இந்த சூழ்நிலையில் தனது கண் குறைபாடு பற்றி கவலைப்படாமல் சொந்தமாக தொழில் செய்து,  மகிழ்ச்சியாக விக்ரம் பிரபு வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவரது சித்தப்பா ஆனந்த் திடீரென்று கொலை செய்யப்படுகிறார். பிறகு விக்ரம் பிரபுவையும் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இதனால் வெகுண்ட விக்ரம் பிரபு தன் சித்தப்பாவின் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முயல்கிறார்.. இறுதியில் தன் சித்தப்பாவை  கொலை செய்தவர் அரசியல் ரவுடியான தனஞ்ஜெயா என்பதை கண்டுபிடிக்கிறார். அரசியல் ரவுடியான தனஞ்செயா விக்ரம் பிரபுவின் சித்தப்பாவை ஏன் கொலை செய்தார்? என்பதுதான் “பாயும் ஒளி நீ எனக்கு”படத்தின் மீதி கதை.

‘கும்கி’ படத்தில் அறிமுகமானபோது தாடி, மீசையுடன் எப்படி நடித்தாரோ அதேபோல முகம் நிறைய தாடியுடன், புதிய தோற்றத்துடன் வலம் வருகிறார் விக்ரம்பிரபு.  தோற்றம் மட்டுமின்றி நடிப்பிலும் வித்தியாசம் காட்டவேண்டிய சூழலில் கதாபாத்திரத்தை உணர்ந்து. அதற்காக மெனக்கெட்டு ஒரு பார்வை குறைவானவன் எப்படி செயல்படுவான் என்பதை அழகான நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார். அதேநேரம் சண்டைக்காட்சிகளில் வில்லனின் அடியாட்களிடம் வெறித்தனமாக அதிரடி காட்டி அசத்தியிருக்கிறார்.

கதாநாயகி வாணிபோஜனுக்கு வழக்கமான கதாபாத்திரம்தான். இயக்குனர் எப்படி நடிக்க சொன்னாரோ அதேமாதிரி அப்படியே செய்திருக்கிறார். அவரது நடிப்பு திறமை  என்பது பெரிதாக இந்த படத்தில் எடுபடவில்லை. பாடல்காட்சிகளில் விதவிதமான கலர்ஃபுல் ஆடைகளுடன் வந்தாலும், தனக்கு கொடுத்த பணியை  சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் டாலி தனஞ்ஜெயா, வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் சிறந்த முறையில்  வில்லத்தனத்தை வெளிப்படுத்தி  ஒரு ரவுடியாகவும் சரி, ஒரு அரசியல்வாதியாகவும் சரி, தன் நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நண்பன் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா, பாசமிக்க சித்தப்பாவாக ஆனந்த், மக்களுக்கு உதவி செய்யும் அரசியல் தாதாவாக வேல. ராமமூர்த்தி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றனர்.

பார்வைக் குறைபாடுள்ள கதாநாயகன் என்பதால் அதற்கேற்றவாறு ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார். மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கும் அவரை பாராட்டாமல் இருக்க முடியாது.

சாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையையும் கதைக்கு ஏற்றவாறு இசையமைத்து இருக்கிறார்.

கதை, எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் அத்வைத், ஆக்சன், சென்டிமெண்ட் என  கதைக்களம் வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதையை ரசிக்கும்படி வலிமையில்லாமல் எழுதி இருப்பது படத்தை தொய்வடைய செய்துவிடுகிறது.

மொத்தத்தில் “பாயும் ஒளி நீ எனக்கு” படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN>