“ரெஜினா” – திரைப்பட விமர்சனம்!

79

சென்னை:

எல்லோ பியர் புரொடக்‌ஷனஸ் சார்பில் டோமின் டி சில்வா இயக்கத்தில் சதீஷ் நாயர் இசையில் வெளிவந்திருக்கும் படம் ‘ரெஜினா’. இப்படத்தில்  ரெஜினாவாக சுனைனா நடித்திருக்கிறார். ம்ற்றும் பாவா செல்லதுரை விவேக் பிரசன்னா ரித்து நிவாஸ் ஆதித்தன் தீனா ஆகியோர் நடிப்பில் வெளி வந்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ஓடி கொண்டிருக்கிறது.

சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது தன் கண் முன்னாலேயே தந்தை கொல்லப்படுவதை பார்த்து மன அழுத்தத்தால் ஒரு அமைதியான பெண்ணாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சுனைனா.  அவர் பெரிய பெண்ணானதும், பல வருடங்கள் கழித்து இயல்பு நிலைக்கு, மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறார்.. இந்த சமயத்தில்தான் வங்கி ஊழியரான  ஆனந்த நாக்கின் அன்பும், காதலும், பாசமும் சுனைனாவுக்கு கிடைத்ததால், அவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகிறார்.

ஒரு நாள் அந்த வங்கியில் கொள்ளை அடிக்க முயலும் முகமூடி கொள்ளையர்கள் ஆனந்த நாக்கை கொலை செய்து விட்டு பணத்தையும் நகைகளையும் எடுத்துச் செல்கின்றனர். கொள்ளையடித்த பணத்தையும்,  நகையையும் காரில் எடுத்துச் செல்லும்போது, அந்த கார் விபத்துக்குள்ளாகி ஓட்டுனர் மட்டும் காவல்துறையினர் மாட்டிக்கொள்கிறார். இதனால் மீண்டும் மன உளைச்சல் ஏற்பட்டு வேதனை அடைந்த சுனைனா காவல் நிலையத்திற்கு சென்று அந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் வேண்டுகிறார்.  ஆனால் அங்கு எந்த நீதியும் கிடைக்காததால் சுனைனா,  அந்த கொள்ளையர்களை  பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறார். தன் கணவனை கொன்ற கொள்ளையர்களை கண்டுபிடித்து சுனைனா  பழி வாங்கினாரா?. இல்லையா? என்பதுதான் “ரெஜினா” படத்தின் மீதி கதை.

ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சுனைனா, முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்து அசத்தியிருக்கிறார். கதையை முழுமையாகத் தாங்கும் கதாபாத்திரம் என்பதால்  அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அவரே டப்பிங் பேசியிருந்தாலும்  சில காட்சிகளில் அவரது குரலில், எந்த வித உணர்வும் இல்லாமல் பலவீனமாக இருக்கிறது. கொலை செய்யப்பட்ட கணவனை நினைத்து கதறி அழும் காட்சியில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

ரித்து மந்த்ரா, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா, நிவாஸ் அதித்தன், பாவா செல்லதுரை, தீனா, கஜராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த பணியை சிறப்பாக  செய்திருக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருப்பதால், அதுவும்  நாயகியை மையப்படுத்திய கதை என்பதற்கேற்ப துல்லியமாக ஒளியமைப்பு செய்து  படம் பிடித்து காட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பவி.கே.பவன்.

சதிஷ் நாயரின் இசையில் பாடல்கள் சுமார்ரகம்தான்.  பின்னணி இசை கதைக்கு பலம் சேர்த்து இருக்கிறது.

இயக்குனர் டோமின் டி செல்வா இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான திரைக்கதையை கொடுத்து விறுவிறுப்பாக இயக்கியிருந்தாலும், சில இடங்களில் அதிகமான கிளாமர் காட்சிகளை புகுத்தி நமது முகத்தை சுளிக்க வைக்கிறார்.

மொத்தத்தில் ‘ரெஜினா’ படத்தை பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.