“மாமன்னன்” திரைப்பட விமர்சனம்!

63

சென்னை:

சேலம் மாவட்டம் காசிபுரம் என்ற தொகுதியில் சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார் பகத் பாசில். அந்தக் கட்சியின் சார்பில் பட்டியல் இன எம்எல்ஏவாக இருக்கிறார் வடிவேலு. ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்த பகத்பாசில் தனக்கு கீழ் அனைவரும் அடங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். எம் எல் ஏ வடிவேலுவின் மகன் உதயநிதி அடிமுறை பயிற்சி வகுப்பு  நடத்திக் கொண்டு, பன்றிகளையும் வளர்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் உதயநிதியுடன் கல்லூரியில் படித்த கீர்த்தி சுரேஷ் இலவசமாக கல்வி கற்றுக் கொடுக்கும் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதனால் வேறொரு கல்வி மையத்தைச் சேர்ந்த ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்த பகத் பாசிலின் அண்ணன் சுனிலுக்கு பாதிப்பு ஏற்படுவதால் கீர்த்தி சுரேஷ் நடத்தும் இலவச கல்வி மையத்தை தனது அடியாட்களை வைத்து அடித்து நொறுக்குகிறார்.

இதனால் கோபமடைந்த உதயநிதி தனது நண்பர்களுடன் சேர்ந்து, சுனில் நடத்தும் கல்வி மையத்தில் உள்ளே புகுந்து அடித்து நொறுங்குகிறார்கள்.  இந்நிலையில் இந்த விஷயத்தை பகத்பாசில் வடிவேலுவிடம் எடுத்து சொல்லி இருவரையும் தனது அண்ணனிடம் சமாதானம் செய்வதற்காக தன் வீட்டுக்கு அழைக்கிறார்.  அங்கு வடிவேலுக்கு உரிய மரியாதை கிடைக்காததால் கோபம் கொண்ட உதயநிதி,  பகத்பாசிலை அடித்து உதைக்கிறார். தான் அடி வாங்கிய விஷயத்தை கட்சித் தலைவரிடம் போய் பகத்பாசில் சொல்ல,  அவர் வடிவேலுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார் இதனால் கோபமடைந்த பகத்வாசில் வேறொரு கட்சிக்கு தாவுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்டசபை தேர்தல் வருகிறது. அதில் வடிவேலுவை எதிர்த்து தனது வேட்பாளரை நிறுத்துகிறார் பகத்பாசில். இந்த தேர்தலில் வடிவேலுவை தோற்கடிக்க பலவித முயற்சிகள் செய்கிறார் பகத். கடைசியில் அந்த சட்டசபை தேர்தலில் வடிவேலு வென்றாரா? அல்லது பகத்பாசிலின் வேட்பாளர் ஜெயித்தாரா? என்பதுதான் “மாமன்னன்” படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் உதயநிதி, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது  அமைதியான முகமும், ஆக்ரோஷமான உணர்வுகளையும் அவர் வெளிப்படுத்தி நடித்த விதமும் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மையை வலிமைபடுத்தி இருக்கிறது. தன்னையும், தன் தந்தையையும் அடக்கி ஆள நினைப்பவர்களுக்கு எதிராக உதயநிதி வெகுண்டெழும் போதெல்லாம் அவரது நடிப்பு சூப்பர். தன் தந்தைக்கு அவமானம் ஏற்படும் போதும், வில்லன்களை அடிக்கும் போதும் ஆக்ரோஷமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இந்தப் படத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கும் உதயநிதிக்கு பாராட்டுக்கள்.

“மாமன்னன்” என்ற கதாபாத்திரத்தில் உதயநிதியின் தந்தையாக நடித்திருக்கும் வடிவேலு, ஒரு காமெடி நடிகன் என்பது தெரியாமல், தனது அசத்தலான நடிப்பு மூலம், அவரது  கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கும் வடிவேலு,  இவ்வளவு நாட்களாக இந்த நடிப்பை எங்கே ஒளித்துவைத்திருந்தார் என்பது தெரியவில்லை.இந்த படத்தில் இவர்தான் கதாநாயகன். ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். “மண்ணாக இருந்த என்னை என் மகன் மாமன்னனாக மாற்றி விட்டான்” என்று சொல்லும் இடத்தில் உணர்ச்சிகரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறார். முழு கதையையும் தனது தோளில் தாங்கி நிற்கிறார் வடிவேலு.

கீர்த்தி சுரேஷுக்கு அவ்வளவு வேலை இல்லை என்றாலும் கதையோடு பயணித்து இருகிறார். அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு கீர்த்தி எற்றவாறு தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிருக்கும் பகத் பாசில். அவருக்கே உரிய பாணியில் நடித்து மிரட்டி இருக்கிறார். தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் காட்டும் ஆக்ரோஷமான நடிப்பின் மூலம் கைத்தட்டல் பெறுகிறார்.

‘உன்னை உட்கார வைக்காதது என் அடையாளம் உன் மகனை உட்காரச் சொன்னது என் அரசியல்’ என்பது போன்ற படத்தில் இடம்பெறும் பல வசனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் இன்றைய காலகட்டத்திலும், சிலர் தங்களது அதிகாரத்திற்காக சாதியை தவறாக பயன்படுத்துவதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மாரிசெல்வராஜ். பெரியார் படம் புத்தர் படம் ஆகியனவற்றைச் சரியான இடங்களில் காட்டி கைதட்டல் பெறுகிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.  சில காட்சிகள் மெதுவாக நகரும்போது, ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கதையின் தாக்கத்தை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் பயணித்துள்ளது. கதைக்களத்தை காட்சிப்படுத்திய விதம் மிக சிறப்பாக இருக்கிறது.

மொத்தத்தில் “மாமன்னன்” படத்தில் அரசியல் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.