‘‘பம்பர்’’ திரைப்பட விமர்சனம்!

45

சென்னை:

தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு ஊரில் கதாநாயகன் வெற்றி தனது நண்பர்களுடன் இணைந்து ரவுடிதனம்  செய்து கொண்டும்,  சிறு சிறு குற்றங்களை செய்து கொண்டும்,  மது அருந்திக்கொண்டும்,  வேலை வெட்டி இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் இந்த நால்வர் மீதும்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இவர்களை கைது செய்ய முயல்கிறார்கள். அந்த சமயத்தில் இவர்கள் நால்வரும் அங்குள்ள ஐயப்பன் கோவிலுக்கு  சென்று மாலை போட அமர்ந்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் அந்த கோயிலுக்குள் சென்று இவர்கள் நால்வரையும் கைது செய்ய முயற்சிக்கும்போது ஐயப்ப பக்தர்கள் தடுத்து விடுகிறார்கள்.

சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு முறைப்படி விரதம் இருந்து இவர்கள் நால்வரும் ஐயப்பன் கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு ஓய்வாக படுத்துக் கொண்டிருக்கும்போது இஸ்லாமியரான  ஹரிஷ் பெராடி கேரளாவில் உள்ள அரசாங்க லாட்டரி சீட்டை கதாநாயகன் வெற்றிக்கு விற்கிறார். பத்து கோடி பம்பர் லாட்டரி சீட்டு வாங்கிய வெற்றி அதை அங்கேயே தவற விட்டு வந்து விடுகிறார். இந்த சூழ்நிலையில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பத்து  கோடி ரூபாய் பரிசு விழுகிறது. அதை எடுத்து வைத்துக் கொள்ளும் ஹரீஷ் பெராடி, அந்த லாட்டரியை தான் எடுத்துக் கொள்ளாமல் வெற்றியிடம் கொடுப்பதற்காக தூத்துக்குடி வருகிறார்.  பத்து கோடியை கொள்ளையடிக்க, ஹரீஷ் பெராடியின் மகனும், மருமகனும் திட்டம் போடுகிறார்கள். அந்த பத்து கோடி ரூபாயை கதாநாயகன் வெற்றிக்கு ஹரீஷ் பெராடி கொடுத்தாரா?அல்லது அவரது மகனும், மருமகனும் கொள்ளையடித்தார்களா?  என்பது தான் இந்த “பம்பர்” படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் வெற்றி, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து, மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடித்திருக்கிறார். ரவுடி கதாபாத்திரத்திரத்திற்க்கு  மிக பொருத்தமாக இருக்கிறார் என்றே சொல்லலாம். பணம் இல்லாத போது சுற்றியிருப்பவர்கள் அவரை அவமானப்படுத்தும் போதும், அதேபோல் தன்னிடம் கோடி கோடியாய் பணம் வரப்போகிறது என்று தெரிந்தவுடன் அவரை சுற்றி நடக்கு மாறுதல்களையும் எதிர்கொள்ளும் காட்சிகளில் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி  நடித்திருக்கிறார். ‘எட்டு தோட்டாக்கள்’ படத்திற்க்கு பிறகு பல படங்களில் வெற்றி நடித்திருந்தாலும், வெற்றி பட வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது என்று பெருமையாக  சொல்லலாம்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷிவானி நாராயணன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொருந்தாத ஒரு பெண்ணாக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

பல படங்களில் வில்லனாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி இப்படத்தில் வயதான இஸ்லாமியராக லாட்டரி சீட்டு விற்பவராக அமைதியான ஒரு கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் அவர் நடிப்பில் அனைவரையும் கவர்ந்து விட்டார்.  முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததோடு, அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து  கையாண்ட விதம் கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். முழு கதையையும் தன் தோளில் தாங்கி  சுமந்து இருக்கிறார். அவர்
ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இப்படத்தில் நடித்து இருப்பதால் கண்டிப்பாக அவருக்கு விருது கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

காவல்துறையில் ஏட்டாக  நடித்திருக்கும் கவிதா பாரதி, ஜி.பி.முத்து, அருவி மதன், ஆதிரா, தங்கதுரை, கல்கி, திலீப், செளந்தர்யா என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையை கதைக்கு ஏற்றவாறு அளவாக அமைத்து படத்திற்க்கு சிறப்பு செய்து இருக்கிறார்.

வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு தகுந்தவாறு பெரிதும் உதவி இருக்கிறது. தூத்துக்குடி மற்றும் கேரளப் பகுதிகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதை பாராட்டலாம்.

ஒரு கேரள லாட்டரிச் சீட்டை மையமாக வைத்துக் கதை எழுதி தற்போது உள்ள மனிதர்களின் மனதில்  உள்ள அசிங்கங்களை வெளுத்து வாங்கி இருருக்கிறார் இயக்குநர் எம்.செல்வகுமார். தொய்வில்லாத திரைக்கதையுடன், விறுவிறுப்பான காட்சிகளுடன், அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்பார்ப்புகளை பரபரப்போடு சீட் நுனியில் அமர வைத்து கைத்தட்டல் பெறுகிறார் இயக்குநர் எம்.செல்வகுமார்.. நேர்மையாக  வாழும் மனிதனின் வாழ்க்கை  என்றும் தோற்காது என்பதை மிக நேர்மையாக திரைக்கதை அமைத்து, முழுமையான கமர்ஷியல் படமாக இயக்கி இருக்கும் இயக்குனருக்கு பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில் இந்த ‘பம்பர்’ அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு சிறந்த  படம்.

ரேட்டிங் 4/5.