“கொலை” திரைப்பட விமர்சனம்!

94

சென்னை:

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தயாரிப்பில், பாலாஜி குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி மற்றும் பல நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கொலை”. இப்படம் இன்று 1020 திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் கதைப் பொறுத்தவரையில்,

ரு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் பிரபல விளம்பர மாடல் அழகியான கதாநாயகி மீனாட்சி செளத்ரி மர்மமான முறையில் கொலை செய்யப்பபட்டு கிடக்கிறார். கொலை நடந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரிக்கும் போது, அங்கு வந்த உயர் அதிகாரி, அந்த கொலை வழக்கை புதிதாக பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரித்திகா சிங்கிடம் ஒப்படைக்கிறார். மேலும் ஏற்கனவே பல வழக்குகளில் உண்மையை கண்டுபிடித்து கொலையாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த, அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரியான விஜய் ஆண்டனி தலைமையில் விசாரணை மேற்கொள்ளுமாறு கூறுகிறார்.

விஜய் ஆண்டனியின் மகள் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் தனது பணியிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். சில மாதங்களாக காவல்துறை பணியிலிருந்து ஒதுங்கி இருக்கும் விஜய் ஆண்டனியிடம் ரித்திகா சிங், விளம்பர மாடல் அழகி கொலை செய்யப்பட்ட விவரத்தை கூறுகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற ரித்திகா சிங் கேட்டுக் கொண்டதற்காக வழக்கை விசாரணை செய்ய ஒப்புக் கொள்கிறார். இருவரும் இணைந்து அந்த மாடல் அழகியை யார் கொலை செய்தார்கள் என்பதை விசாரிக்கும்போது, அந்த கொலையை செய்தது யார் என்பதை  விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் இருவரும் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான்  மீதிக்கதை..‌.

விநாயக் என்ற கதாபாத்திரத்தில் துப்பறியும் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, ஒரு  எதார்த்தமான நடிப்புக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் அமைதியாக மிக சிறப்பாக நடிப்பில் அசத்தி இருக்கிறார். வழக்கமான விஜய் ஆண்டனியாக இல்லாமல் பாதி நரைத்த முடியுடன் தோற்றத்தில் வேறுபாடு காட்டியிருப்பதோடு கூர்ந்த பார்வை கம்பீர உடல்மொழியுடன், ஸ்டைலிஷான நடிப்பு மூலம் கதைக்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் மாறுபட்ட முறையில் இருப்பதை பாராட்டலாம்.

இளம் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், தனது அளவான நடிப்பின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்கிறார். ஆக்ஷன்அதிரடி சண்டைக் காட்சிகள் இல்லையென்றாலும்,  தனக்கு கொடுத்த  காட்சிகளில் மிக அழகாகவும் அளவாகவும் நடித்து இருக்கிறார்.

லேலா என்ற மாடல் அழகியாக நடித்திருக்கும் புதுமுகம் மீனாட்சி செளத்ரி, சர்வதேச மாடல் அழகிக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருப்பதோடு, தனது நடிப்பிலும் மாடல் அழகியாக சிறந்த முறையில் அற்புதமாக மிரட்டியிருக்கிறார்.

மீனாட்சியின் காதலராக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் விஜய், ராதிகா என அனைத்து நடிகர்களும், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தங்களுக்கு கொடுத்த பணியை  இயல்பான  நடிப்பின் மூலம் படத்திற்க்கு  கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிரார்கள்.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு ஹாலிவுட்படத்திற்கு இணையாக பன்மடங்கு உயர்த்தி காட்டியிருக்கிறது. வித்தியாசமான கோணங்கள் அமைத்தது மட்டுமல்லாது,  எது கிராபிக்ஸ், எது உண்மை என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி காட்சிகளை படமாக்கி கடுமையாக உழைத்திருக்கிறார்.

கிரிஷ்கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்களை  ரசிக்கலாம்.  ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடல் அனைவரையும் கவர்கிறது. பின்னணி இசையிலும் வழக்கமான க்ரைம், திரில்லர் ஜானர் படங்களுக்கானதாக அல்லாமல் புதிய வடிவில் இருக்கிறது.

‘விடியும் முன்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பாலாஜி குமார், இப்படத்தின் மூலமாக வித்தியாசமாக, ஒரு தனித்தன்மை வாய்ந்த கதையாக எழுதி,  ஹாலிவுட் ஸ்டைலில் காட்டியிருப்பதை பாராட்டலாம்.  இந்தக் கொலை சம்பந்தமாக பல படங்கள் வெளி வந்தாலும், தனது மேக்கிங் ஸ்டைல் ரசிகர்களுக்கு புதிய  அனுபவத்தை கொடுக்கும் வகையில் இப்படத்தை இயக்கியிருப்பதை கண்டிப்பாக பாராட்டலாம்.

மொத்தத்தில், கிரைம் திரில்லர் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் படம்தான் இந்த ‘கொலை’

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.