“டைனோசர்ஸ்” திரைப்பட விமர்சனம்!

63

சென்னை:

கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள “டைனோசர்ஸ்” என்ற இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிட,  இப்படத்தில் கதாநாயகனாக உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, பிரபல புகைப்பட கலைஞர் மானேக்‌ஷா, ஜானகி மற்றும் அருண் உள்ளிட்ட பல நடிகர்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் எம் ஆர் மாதவன் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் கதையை பொருத்தவரையில், 

வடசென்னை என்றாலே ரவுடிகள் சாம்ராஜ்யம் அதிகமாக இருக்கும் என்று அனைவரும் கருதுகின்றனர் ஆனால் இப்போது வட சென்னை மாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் டைரக்டர் எம் ஆர் மாதவன் வடசென்னையில் உள்ள எண்ணூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ரவுடிகளை பற்றி மிகவும் மாறுபட்ட முறையில் கதையை அமைத்து  ‘டைனோசர்ஸ்’  என்ற இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

வடசென்னையில் உள்ள எண்ணூர் பகுதியில் சாலையார் என்ற தாதாவும், மற்றும் இன்னொரு பகுதியில் கிளியப்பன் என்ற தாதாவும்  என இரண்டு தாதாக்கள் தன்னுடைய அடையாளங்களை வைத்து ரவுடித்தனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு கும்பல்களின் தலைவர்கள் என்பதால் இவர்கள் மத்தியில் பகை எப்போழுதும் இருந்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் கிளியப்பனின் தங்கை கணவரை சாலையாரின் அடியாட்கள் எட்டு பேர் கொண்ட  கும்பல் கொலை செய்து விடுகின்றனர். அவர்களை கிளியப்பன் உயிருடன் விட்டு வைக்க மாட்டார் என்பதால், பாதுகாப்பு கருதி, அவர்களை காவல்துறையில் ஒப்படைத்து சிறைக்கு அனுப்ப முடிவு செய்கிறார். சாலையார்.

அவரது யோசனையை ஏற்றுக் கொண்ட  ஏழு பேர் சிறை செல்கிறார்கள். எட்டாவது நபரான கொலைக்குழுவிற்கு முக்கிய பங்கு வகித்த தில்லுதுரைக்கு  திருமணமாகி ஒன்பது நாட்கள்  ஆகியிருப்பதால், அவன் சரணடைய மறுக்கிறான். நட்புக்காக தில்லுதுரைக்கு உதவ முன்வரும் தனா  எட்டாவது நபராக சிறைக்குச் செல்கிறான். தனது தங்கை கணவரைக் கொன்ற முக்கிய கொலையாளியான தில்லுதுரை சாலையாருடன்தான் இருக்கிறான் என்ற விஷயம் கிளியப்பனுக்குத் தெரிய வருகிறது. இந்த சூழலில் கிளியப்பனின் ஆட்கள் தில்லுதுரை யார் என்பதை கண்டுபிடித்து, கொடூரமாகக் கொன்று விடுகிறார்கள். தன் கண் எதிரிலேயே கொல்லப்பட்ட தில்லுதுரையின் தம்பி கதாநாயகன் மண்ணு என்ற ‘ஆற்றல் மண்’ .அண்ணனைக் கொன்றவர்களை பழி வாங்க துடிக்கிறார். அந்த கொலையாளிகளை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? இல்லயா? என்பதுதான் “டைனோசர்ஸ்” படத்தின் மீதிக்கதை.

மண் என்ற ஆற்றல் மண் என்ற கதாபாத்திரத்தில் வட சென்னை இளைஞராக நடித்திருக்கும் உதய் கார்த்திக், தனது மிரட்டலான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார்.முதலில் சாதாரணமாக வந்துபோகும் அவரது கதாபாத்திரம், ஒரு கட்டத்துக்குப் பிறகு படத்தையே தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது.   இவர் செய்யும் நக்கல், நய்யாண்டி, அலப்பறைகள் அனைத்தும் படம் பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்து விடுகிறது. எதார்த்தமான அசால்டான அவரது நடிப்பு, தமிழ்த் திரையுலகில் ஒரு நல்ல இடத்தை அவருக்கு பெற்றுக் கொடுக்கும் என்று நம்பலாம். எதிர்காலத்தில் உதய் கார்த்திக் ஒரு சிறந்த கதாநாயகனாக வலம் வருவார் என்பதில் ஐயமில்லை.

கதாநாயகியாக நடித்திருக்கும் சாய் பிரியா தேவாவுக்கு படத்தில் அதிக வேலை இல்லை என்றாலும், ரசிகர்கள் நெஞ்சில் அழகு பதுமையாக காதலிக்கத் தூண்டும் அழகுடன் வசீகரிக்கிறார்.

தாதா சாலையாராக வரும் மானேக்‌ஷாவும், போட்டி தாதா கிளியப்பனாக வரும் கவின் ஜெய்பாபு இருவரும் வடசென்னை தாதாக்கள் கதாபாத்திரத்திற்க்கு ஏற்ற தேர்வு என்றே சொல்லலாம். இருவரும் போட்டிபோட்டு மிரட்டலாக நடித்து அவர்களது கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

கதாநாயகனின் அண்ணன் துரையாக வரும் மாறா, மிக சிறப்பாக நடித்திருக்கிறார். நட்புக்கு இலக்கணமான திகழும்  தனா கதாபாத்திரத்தில் வரும் ரிஷி, அளவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். அதுபோல் நாயகனின் அம்மா ‘சின்ன குழந்தை’யாக வரும் ஜானகி உள்ளிட்ட சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து கவனம் ஈர்க்கிறார்கள்.

அறிமுகம் இல்லாத புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து, விறுவிறுப்பான, பரபரப்பான திரைக்கதை மூலமும், ரசனையான வசனங்கள் மூலமும்  படத்தை சுவாரஸ்யப்படுத்தி அறிமுக இயக்குனர் எம் ஆர் மாதவன் இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைக்கும் விதத்தில் இயக்குநர் வட சென்னை கதைக்களத்தை வழக்கமான பாணியில் சொல்லாமல் புதிய பாணியில் சொல்லி இருப்பதை பார்க்கும்போது கைத்தட்டல் கொடுக்கலாம்.

வடசென்னையை சார்ந்த கதையை ரத்தமும் சதையுமாக  படம் பிடித்துக் காட்டியிருக்கும் ஜோன்ஸ் வி.ஆனந்த்தின் ஒளிப்பதிவு கதாப்பாத்திரங்களுடன் படம் பார்ப்பவர்களையும் வட சென்னையில் பயணிக்க வைக்கிறார்.

போபோ சசியின் மண்வாசனையுடன் கூடிய இசையும் இயக்குனரின் கதைக்கேற்றவாறு உறுதுணையாக இருந்தது மட்டுமில்லாமல், பின்னணி இசை திரைக்கதையின் விறுவிறுப்புக்கு ஏற்றபடி சிறப்பாக அமைத்து இருக்கிறார்.

மொத்தத்தில் இந்த ‘டைனோசர்ஸ்’ படத்தை பார்ப்பவர்கள் கைத்தட்டி  ரசிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

ரேட்டிங் 4/5

RADHAPANDIAN.