“எல். ஜி. எம்” திரைப்பட விமர்சனம்!

79

சென்னை:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரரான தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பாக முதல் தமிழ் தயாரிப்பு ‘எல் ஜி எம்’. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஷ் கல்யாண், தன் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலேயே தன் அப்பா இறந்து விட்டதால் அம்மா நதியாவின் அரவணைப்பில் வாழ்ந்து வரும், சூழ்நிலையில் தன்னுடைய ஐடி அலுவலகத்தில் பணி புரியும் இவானாவை காதலிக்கிறார். இருவரும் காதலிக்கும் போது இரண்டு வருடங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பழகிய பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். இரண்டு வருடம் கழித்து இவானா, தான் காதலிக்கும் ஹரிஷ் கல்யாண் பற்றி தன் பெற்றோரிடம் சொல்கிறார். அவரது பெற்றோரும்  இவானாவை பெண் பார்க்க, ஹரிஷ் கல்யாணை வரச் சொல்கிறார்கள்.

ஹரிஷ் கல்யாண் தன் அம்மா நதியாவை அழைத்துக் கொண்டு, இவானாவை பெண் பார்க்க அவரது  வீட்டிற்கு வருகிறார். பெண் பார்க்கும் படலம் நடந்தபோது நதியா இவானாவிடம்,  உன்னை ‘என் மகள் போல பார்த்துக் கொள்வேன்’ என்று கூறுகிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த  இவானா திருமணம் செய்த பிறகு தனியாக குடும்பம்  நடத்த  ஆசைப்படுகிறார்.  ஹரிஷ் கல்யாணை தனியாக மாடிக்கு அழைத்து சென்று,  அம்மா  நதியாவை  விட்டு தனியாக வாழவேண்டும் என்று சொல்ல,  இதனால் கோபம் அடைந்த ஹரிஷ் கல்யாண் அதற்கு சம்மதிக்காமல், தன் அம்மாவுடன் இவானாவின் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் இவானா தன் காதலன் ஹரிஷ் கல்யாணை அழைத்து,  அவரது அம்மா நதியாவுடன் இணைந்து பழகி பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்காக ஏதாவது ஒரு ஊருக்கு லாங் ட்ரிப் செல்லலாம் என்று கூறுகிறார். அப்போது வருங்கால மாமியாருடன் பழகிப்பார்த்து,  பிடித்து இருந்தால் இருவரும்  திருமணம் செய்துகொள்ளலாம், இல்லை என்றால் திருமணம் வேண்டாம்,..என்கிறார். அவரது அந்த யோசனைக்கு ஒப்புக் கொண்ட ஹரிஷ் கல்யாண், இருவரது குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு கர்னாடகாவில் உள்ள இயற்கை எழில் மிகுந்த மலைப்பிரதேசமான கூர்க் என்ற இடத்திற்கு செல்கின்றனர். அங்கு சென்ற அம்மா நதியாவும் காதலி இவானாவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்களா? ஹரிஷ் கல்யாண் – இவானா இருவருக்கும் திருமணம் நடந்ததா?  என்பதுதான் “‘எல்.ஜி.எம்’” படத்தின் மீதிக் கதை.

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகிய மூன்று பேரை சுற்றிதான் இப்படத்தின் கதையே உருவாகி இருக்கிறது. இந்த மூன்று பேரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு மிகவும் சிறப்பாக  நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் எந்தவித ஆக்ஷன், சண்டைக் காட்சிகள் இல்லாமல் சாக்லட் பாயாக தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவானா பல படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும், நடிப்பில் அவ்வளவாக அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. எனக்கு ஒரு ஐடியா என்று அவர் சொல்வது ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.

நதியாவின் உண்மையான நடிப்பு இரண்டாம் பாதிக்கு மேல்தான் ஒரு தாயின் உணர்வை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். இப்படத்தின் கடைசி கட்ட காட்சிவரை கஷ்டப்பட்டு நடித்த நதியாவின் உழைப்பு நன்கு தெரிகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இவானாவுடன் நடனம் ஆடும் காட்சியில்  அசத்தி இருக்கிறார். இறுதிக் கட்ட காட்சியில் நதியாவை பிடித்திருக்கிறது என்று இவானா சொல்லுவது படம் பார்த்த யாருக்கும் பிடிக்கவில்லை.

ஓட்டுனராக வரும் யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு வரும்படியாக இருக்கிறது.  வி.ஜே. விஜய்யும் தனது பங்கிற்கு காமெடி வசனங்கள் மூலம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.

ஒளிப்பதிவாளர் விஸ்வஜித், இந்த படத்தை  தரமாகவும் உயர்தட்டு நாகரிகமாகவும் காட்சிகளை மட்டும் இன்றி கதாபாத்திரங்களையும் அழகாக காட்டியியிருக்கிறார். கூர்க், கோவா ஆகிய இடங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையில் பாடல்கள் சுமார்ரகம்தான் என்றாலும், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.

ஒரு அலுவலகத்தில் பணி புரியும் பெண் தன் வருங்கால கணவர் பற்றி தெரிந்துக்கொள்வதை விட, வருங்கால மாமியர் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பும் பெண்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இப்படத்தின் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார். முதல் பாதியை காமெடியாகவும், சுவாரஸ்யமாகவும் கதையை நகர்த்தி சென்ற இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, இரண்டாம் பாதியில் தேவையில்லாத நடன காட்சிகளை புகுத்தி இருப்பது தேவை இல்லாத ஒன்று.

மொத்தத்தில் “எல் ஜி எம்” – படத்தை குடும்பத்துடன் சென்று கண்டு களிக்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.