மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.
சென்னை:
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.
மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி அம்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிராமப்புற நாடகக் கலைஞர்கள் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணகிரி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆ.குமரன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மிருதன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த கே.ஜே வெங்கட்ரமணன் இந்த படத்தின் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மணிகண்டன் முரளி இசையமைதுள்ளார்.
பாடல்களை அந்தோணி தாசன், தஞ்சை சின்னப்பொண்ணு, ஜோக்கர் படத்திற்காக தேசியவிருது பெற்ற சுந்தரய்யர் மற்றும் கபில் கபிலன் ஆகியோர் பாடியுள்ளனர். ஜோக்கர் படத்தில் பாடிய ராணியின் பாடல் வரிகளையும் இதில் பயன்படுத்தி உள்ளதுடன் அவரும் இந்தப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறும்போது,
“யதார்த்தமான ஒருவரின் வாழ்வியல் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. தங்களது சொந்த வாழ்க்கையைத் தாண்டி அவர்கள் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள், சூழல் அவர்களை எப்படி பெரிய மனிதர்கள் ஆக்குகிறது என்கிற விதமாக இதன் கதை உருவாகியுள்ளது. எளிய மக்களில் இருந்து பெரிய மக்கள் வரை சார்ந்ததாக இந்த கதை இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உந்துதல் அளிக்கும் ஒரு படமாக இருக்கும். ஒரு நல்ல சமூக கருத்து இந்த படத்தில் இருக்கிறது. படம் பார்க்கும் அனைவராலும் இந்த கதையுடன் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது எப்படி தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள், ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார், நாயகியின் முறைப்பையனாக வரும் நாயகன் அவளுக்கு எப்படி உறுதுணையாக நிற்கிறார், அவள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதும் சொல்லப்பட்டுள்ளது.
இதனால் அந்த சமூகத்தில் யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடியாத ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கிறது. காவல்துறையோ, அரசாங்கமோ தடுக்க முடியாத ஒரு விஷயத்தை, இது இருந்தால் எல்லோருமே தங்களை பாதுகாப்பாக வழி நடத்திக் கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தை இந்த கதையில் சொல்லி இருக்கிறோம். இது சமூகத்திற்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட ஒரு கதையாக உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக தூய்மை பணியாளர்களின் வாழ்வியலை மையப்படுத்தி குப்பைக்காரன் என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளேன். இதற்காக சர்வதேச திரைப்பட விருதும் பெற்றுள்ளேன். சில முக்கியமான படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளேன். நான் சாதாரண ஒரு கிராமத்தில் வாழ்ந்தவன் என்பதால் எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து எல்லாவற்றையும் பார்க்கிறேன். அதனால் எனது கதைகள் எல்லாமே சமூக பார்வையுடன் தான் இருக்கும். சமூகத்திற்கு மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் தான் படங்கள் இயக்குவேன்” என்று கூறியுள்ளார்
*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*
தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி
டைரக்சன் ; ஜெஸ்டின் பிரபு
ஒளிப்பதிவு ; ஏ.குமரன்
படத்தொகுப்பு ; கே.ஜே வெங்கட்ரமணன்
இசை ; மணிகண்டன் முரளி
பாடகர்கள் ; அந்தோணி தாசன், தஞ்சை சின்ன பொண்ணு, சுந்தர அய்யர் மற்றும் கபில் கபிலன்
மக்கள் தொடர்பு ; A.ஜான்